கேராளவின் கண்ணூர் மாவட்டத்தில் சவ்வாசேரியில் வசித்து வருபவர் சுதீஷ். அங்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொண்டராக இவர் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், அவரின் வீட்டில் இருந்து 50 மீ. தூரத்தில் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்தவுடன், மட்டனூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் வல்லுநர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஆதாரங்களை சேகரித்து சென்றனர். மோப்ப நாய் குழுவினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட காவல் அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சுதீஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கும் போலீசார், குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் ஆர்எஸ்எஸ் – எஸ்டிபிஐ கட்சி ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலின்போது, இதே பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், சில வீடுகளும், பொதுச்சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டது.
இதேபோன்று, கண்ணூர் மாவட்டத்தின் கன்னாவம் பகுதியில் நேற்று (செப். 10) எஸ்டிபிஐ கட்சி பிரமுகரின் வீட்டு அருகிலும் குண்டுவெடிப்பு நடந்தது. அதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் கடந்த ஆண்டுகளாகவே அரசியல் கொலைகளும், இதுபோன்ற மோதல் போக்குகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.