கூட்டுறவுத் துறை வளர்ச்சி: ஒன்றிணைந்து செயல்பட தீர்மானம்!

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை வழங்குவதற்கும், கூட்டுறவிலிருந்து செழிப்புக்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் பிரதமர் மோடி தலைமையில் புதிய கூட்டுறவு அமைச்சகம் 2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து, கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கூட்டுறவு அமைச்சகத்தால் மாநிலக் கூட்டுறவுத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நடத்தப்பட்டது. கூட்டுறவுத்துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா வரவேற்புரையுடனும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமிஷ் ஷா தொடக்க உரையுடனும் மாநாடு தொடங்கியது.

மாநாட்டின் முதல் நாளில், மாநிலக் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கூட்டுறவுத்துறையுடன் தொடர்புடைய பல துறைகள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

தேசிய கூட்டுறவுக் கொள்கை, தேசிய கூட்டுறவு தரவுத்தளம், கூட்டுறவு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்கள் அதாவது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், விவசாயம் சார்ந்த மற்றும் இதர பொருட்களின் ஏற்றுமதி, இயற்கை வேளாண் பொருட்களின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல், புதிய பகுதிகளுக்கு கூட்டுறவுகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

மேலும், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் தொடர்பான விஷயங்கள் மற்றும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் கணினிமயமாக்கல் உள்ளிட்ட மாதிரி அமைப்புச் சட்டங்கள், செயலிழந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்கான செயல் திட்டம், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் மாதிரி அமைப்புச் சட்டங்கள் ஆகியவற்றுடன் தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நீண்ட கால நிதியுதவிக்கு முன்னுரிமை அளிப்பது, பால் கூட்டுறவு சங்கங்கள், மீன் கூட்டுறவு சங்கங்கள் போன்றவை தொடர்பான விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

இறுதியாக, கூட்டுறவின் மூலம் வளம் மந்திரத்தை மெய்ப்பிக்கவும், நாட்டில் கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார மாதிரிக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தீர்மானத்துடன் மாநாடு நிறைவடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.