மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் பிரன்ஜித்கோஸ் (24). இவரின் மனைவி அர்பிதாபால் (20) . இவர்கள் இருவரும் கடந்த 3-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எண் 102-ல் மூன்று நாள்கள் தங்கியிருந்தனர். அடிக்கடி பிரன்ஜித்கோஸ் மட்டும் வெளியில் சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 7-ம் தேதி அறை எண் 102-ல் இருந்து தூர்நாற்றம் வீசியது. அதனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தபோது அதில் ஒரு தற்கொலை கடிதமும் விஷ பாட்டிலும் கிடந்தது. அர்பிதாபால் எழுதிய தற்கொலை கடிதத்தில், தன்னுடைய ஆண் நண்பர்களின் பாலியல் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அர்பிதாபால் குறிப்பிட்ட ஆண் நண்பர்களான திருண்ணாமலையைச் சேர்ந்த ராஜா, ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார், அஸ்ஸாமை சேர்ந்த தர்மேந்திரா ஆகியோர் குறித்து போலீஸார் விசாரித்தனர். இதில் தர்மேந்திராவைத் தவிர மற்ற இருவரும் போலீஸாரிடம் பிடிப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாவையும் நிதிஷ்குமாரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜா, நிதிஷ்குமார் ஆகியோரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தற்கொலை செய்துகொண்ட அர்பிதாபால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியுள்ளார். அப்போது அவருடன் ராஜா, நிதிஷ்குமார், தர்மேந்திரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். அவர்களுடன் அர்பிதாபால், சகஜமாக பழகி வந்துள்ளார். மேலும் அவர்களோடு செல்ஃபி வீடியோக்களும் எடுத்துள்ளார்.
அதில் சில வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்த ஆண் நண்பர்கள், அதைக் காண்பித்து அர்பிதாபாலுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். அந்தத் தொல்லை தாங்க முடியாமல் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து அர்பிதாபால், தன்னுடைய பள்ளி பருவ காதலன் பிரன்ஜித்கோஸ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த பிறகாவது, தனக்கு பாலியல் தொல்லை குறையும் என அர்பிதாபால், நம்பியுள்ளார். ஆனால் அதன்பிறகும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கணவரோடு திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியிருந்துள்ளார். அப்போது முதலில் அர்பிதாபால், விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து பிரன்ஜித்கோஸும் தற்கொலை செய்துள்ளார். தலைமறைவாக இருக்கும் தர்மேந்திராவைத் தேடிவருகிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. மொழி பிரச்னை காரணமாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்றனர்.