அரக்கோணம்: ராணிப்பேட்டை அருகே நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் காஞ்சிபுரம்-அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பஸ் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள், டிரைவர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பிரபல தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சொந்தமான பஸ்கள், வேன்களில் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் தனியார் பள்ளிக்கு சொந்தமான மினிபஸ் இன்று காலை நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு மற்ற ஊர்களுக்கு புறப்பட்டது. செல்லும் வழியில் காஞ்சிபுரம்-அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது பஸ்சில் திடீரென புகைமூட்டம் வந்தது. பின்னர் திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது. உடனே சுதாரித்த டிரைவர் மற்றும் மாணவர்கள் உடனே இறங்கி அலறியடித்தபடி ஓடி தப்பினர். சில நொடிகளில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த நெமிலி போலீசார் அங்கு வந்தனர். மேலும் அரக்கோணம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் தீக்கிரையானது. பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி பஸ் முறையாக பராமரிப்பு இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.