அரபு நாடுகள் தவிர்த்து உலகெங்கிலும் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டுவிட்ட நவீன யுகத்தில் 70 ஆண்டுகள் ஒரு தேசத்தின் மகாராணியாகப் பதவி வகிப்பது சாதாரண விஷயம் இல்லை. பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் அந்தச் சாதனையைச் செய்து மறைந்திருக்கிறார்.
சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என்ற பெருமையுடன் உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசின் பொற்காலத்தில் அவர் பதவி ஏற்கவில்லை. இந்தியா உள்ளிட்ட எல்லா காலனி ஆதிக்க நாடுகளும் சுதந்திரம் அடைந்து, பிரிட்டிஷ் அரசின் அதிகாரம் அதன் தீவுகளுக்குள் சுருங்கிய காலத்தின் மகாராணி அவர். எவ்வளவு பெரிய பிரபலத்தையும் விமர்சனங்களால் அடித்துத் துவைக்கும் இந்த சோஷியல் மீடியா யுகத்திலும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் வாழ்ந்தவர் அவர். அதனால்தான் பிரிட்டிஷ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அவர் ஆட்சியில் அமர்ந்த 1952-ம் ஆண்டில்தான் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் மனிதர்கள் தொட்டார்கள். நிலவைத் தொடுவது என்பது அப்போதுவரை கனவாகவே இருந்தது. கம்ப்யூட்டர், செல்போன், ஜி.பி.எஸ் என எதுவுமே இல்லாத காலத்தின் மகாராணி அவர். பல போர்களைப் பார்த்தார். தன் கண்ணெதிரே சோவியத் யூனியன் நொறுங்கி வீழ்ந்ததைப் பார்த்தார். அவர் காலத்தில் பிரிட்டனில் 15 பிரதமர்கள் மாறிவிட்டார்கள். அமெரிக்காவில் 14 அதிபர்கள் மாறிவிட்டார்கள். இந்தியாவில் நேரு தொடங்கி மோடி வரை 14 பிரதமர்கள் மாறிவிட்டார்கள். மாறாத மகாராணியாக அவர் தொடர்ந்து பதவி வகித்தார்.
உலகின் மிகப் பணக்கார அரச வம்சங்களில் ஒன்று பிரிட்டிஷ் ராஜவம்சம். பக்கிங்காம் அரண்மனை உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், பல்லாயிரம் ஏக்கர் எஸ்டேட் என சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் கொண்ட குடும்பம். ஆனால், மகாராணி பதவியை விருப்பமே இல்லாமல்தான் எலிசபெத் ஏற்றுக்கொண்டார்.
பிரிட்டன் மன்னராக இருந்த எலிசபெத்தின் பெரியப்பா ஏழாம் எட்வர்டு ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலித்தார். அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக தன் மகுடத்தைத் துறந்தார். அதனால் எலிசபெத்தின் அப்பா ஆறாம் ஜார்ஜ் அடுத்த மன்னராகப் பதவி ஏற்றார். பிரிட்டிஷ் அரச மரபு விதிமுறைகளின்படி, ஒரு மன்னருக்கு மகன்கள் இல்லையென்றால், அவரின் மூத்த மகளே அடுத்த மகாராணியாகப் பதவி ஏற்க வேண்டும். அதனால், 12 வயதில் இளவரசி ஆனார் எலிசபெத்.
அரச குடும்ப வாழ்க்கை அவருக்கு அச்சம் தந்தது. பள்ளிக்குப் போக முடியாது. பல ஆசிரியர்கள் அரண்மனைக்கே வந்து பாடம் நடத்துவார்கள். வரலாறு, அறிவியல், இலக்கியம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகள் என எல்லாவற்றுடன் சமயக் கல்வியும் உண்டு. குதிரையேற்றம், நீச்சல், நடனம், கலைகள் என்று எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பொம்மைக்குதிரைகளை வைத்துக்கொண்டு தோழிகள் துணையின்றி ஏக்கமாக விளையாடிய வயதில், இந்தப் பயிற்சிகள் அவருக்கு வெறுப்பு ஏற்படுத்தின. ‘எனக்கு ஒரு தம்பி பிறந்தால், நான் மகாராணி ஆகாமல் தப்பித்துவிடுவேன். ஒரு தம்பியைக் கொடு இறைவா’ என்று தினம் தினம் வேண்டுவாராம் எலிசபெத். ஆனால், அந்த வேண்டுதல் பலிக்கவில்லை. 1952-ம் ஆண்டு தந்தை இறக்க, 25 வயதில் அரியணை ஏறினார் எலிசபெத்.
பிரிட்டிஷ் மகாராணி என்பவர் பிரிட்டனுக்கு மட்டும் அரசி இல்லை. ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 14 நாடுகளுக்கும் மகாராணி. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முன்பு இருந்த இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவரும் அவர்தான். இத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எல்லாமே அலங்காரப் பதவிகள்தான். இந்தியாவில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரமோ, கிட்டத்தட்ட அதேபோன்ற அதிகாரங்கள் கொண்ட மகாராணியாகவே அவர் இருந்தார்.
பிரிட்டிஷ் மக்களுக்கு அவர் பெயரில்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் அவர் உருவம்தான் இருக்கும். ராணுவம் அவர் பெயரில்தான் இயங்கும். கிட்டத்தட்ட 500 சேவை நிறுவனங்களுக்கு அவர் தலைமைப்பதவி வகித்தார்.
அரசின் எல்லா முடிவுகளும் அவர் ஒப்புதல் தந்தால்தான் சட்டமாகும். ஒரு சிவப்புப்பெட்டியில் அரசாங்க ஆவணங்கள் அவரின் முத்திரை ஒப்புதலுக்காக வருவது ஒரு சடங்கு போல நிகழும். பிரிட்டிஷ் பிரதமருக்கு அவரே பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். கடந்த வாரம் தேர்வான லிஸ் டிரஸ், அவரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட கடைசி பிரிட்டிஷ் பிரதமர். வாரம் ஒருமுறை பிரதமர் வந்து மகாராணியை சந்திப்பது மரபு. அரசின் முடிவுகளை அப்போது மகாராணி பாராட்டவோ, கண்டிக்கவோ செய்வார்.
என்றாலும், எந்தத் தருணத்திலும் அரசின் முடிவுகளை அவர் வெளிப்படையாகக் கண்டித்தது இல்லை. சர்ச்சில், மார்கரெட் தாட்சர் போன்ற வலிமையான பிரதமர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் அரண்மனையுடன் மோதியது உண்டு. அப்போதும் மகாராணி எதுவும் சொன்னதில்லை. ஆளும் கட்சிகள் மாறினாலும், எல்லோரிடமும் அவர் ஒரே இயல்புடனே நடந்துகொண்டார். அந்த அரசியல் நடுநிலை ஆச்சர்யமாக இருக்கும். தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறைகூட அவர் பேட்டி கொடுத்ததில்லை. ‘என் காலத்தை அடுத்தவர்கள்தான் மதிப்பிட வேண்டும். நானே மதிப்பிடுவது நன்றாக இருக்காது’ என்று மட்டும் ஒருமுறை சொன்னார்.
மன்னர் குடும்பம் என்பது மக்களிடமிருந்து விலகி தனியாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால், ‘நாம் வாக்களித்து பிரதமரைத் தேர்வு செய்யும் ஜனநாயக காலத்தில் இருக்கிறோம். இன்னும் எதற்கு அரச பரம்பரை’ என்று கேட்பவர்கள் அதிகரித்துவிட்ட காலத்தின் மகாராணியாக இருந்தார் எலிசபெத். அதை அவர் உணர்ந்தும் இருந்தார்.
1992-ம் ஆண்டு அரச குடும்பத்தில் விண்ட்ஸர் கோட்டை தீ விபத்தில் சேதமடைந்தது. அதை அரசு செலவில் சரிசெய்தாக வேண்டும். ஆனால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘அரச குடும்பம் வரியே கட்டுவதில்லை. ஆனால், எங்கள் வரிப்பணத்தில் அவர்கள் கோட்டையைச் சீரமைக்க வேண்டுமா’ என்று பலர் கோபமாகக் கேட்டார்கள். அந்தக் கேள்வியில் இருந்த கோபத்தைப் புரிந்துகொண்டார் எலிசபெத். ‘மகாராணி என்பதற்காக எனக்கு சலுகை தேவையில்லை. என் தனிப்பட்ட வருமானத்துக்கு வரி கட்டுவேன்’ என அறிவித்தார். கோட்டையை சீரமைக்கும் செலவில் முக்கால்வாசியை அரச குடும்பம் ஏற்றது.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார் மகாராணி. அதை எலிசபெத் தானே கைப்பட எழுதுவார். அந்த ஆண்டு பேசும்போது, ‘மன்னர் குடும்பம் உட்பட யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எங்கள் மீது விசுவாசம் காட்டுபவர்கள், எதிர்ப்பவர்கள் என்று எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு’ என்றார் மகாராணி.
இந்தியாவுக்கு அவர் மூன்றுமுறை வந்திருக்கிறார். 1997-ம் ஆண்டு இந்தியா தனது சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடியபோது வந்தார். சுதந்திரப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசிடம் இந்தியர்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து அப்போது பேசினார். ‘‘நம் கடந்த காலத்தில் கடினமான சில அத்தியாயங்கள் இருந்தன. ஜாலியன்வாலா பாக் அதில் ஒரு வலி மிகுந்த உதாரணம்’’ என்றார் அவர். இந்தியர்கள் மீது மிக மோசமான தாக்குதலை பிரிட்டிஷ் ராணுவம் நடத்திய ஜாலியன்வாலா பாக் நினைவிடத்துக்கும் அவர் சென்று அஞ்சலி செலுத்தினார். ‘அந்தத் தாக்குதலுக்கு மகாராணி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அப்போது பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்தன. ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதேபோல, இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தைத் திருப்பிக் கேட்கும் கோரிக்கைக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தார் அவர்.
மிக நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரம். ஆனால், வாழ்க்கைத் துயரங்களையும் அது அதிகமாகக் கொடுத்துவிடும். தன் காதல் கணவர் பிலிப்புடன் 74 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார் அவர். ஆனால், அவர் குடும்பத்தில் பலருக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. மூத்த மகன் சார்லஸ் தன் மனைவி டயானாவை விவாகரத்து செய்தார். மக்கள் நேசித்த இளவரசியாக இருந்த டயானா அரச குடும்பத்திலிருந்து வெளியேறியபோது தேசமே மன்னர் குடும்பத்தைத் தூற்றியது. ஒரு கார் விபத்தில் டயானா இறந்தபோது, மன்னர் குடும்பம் மீண்டும் சாபத்துக்கு ஆளானது. சார்லஸ் பிறகு தன் காதலி கமீலாவைத் திருமணம் செய்துகொண்டார். மகாராணி எலிசபெத்தின் இன்னொரு மகன் ஆண்ட்ருவும் தன் மனைவியை விவாகரத்து செய்தார். மகள் ஆனியும் மணமுறிவுக்கு ஆளானார்.
சார்லஸின் குடும்பமும் சர்ச்சைகளுக்குத் தப்பவில்லை. சார்லஸ் – டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்கலைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரை நிறவெறியுடன் அரச குடும்பம் நடத்தியதாகக் குற்றம் சாட்டி, தன் இளவரசர் பட்டத்தையே துறந்து அரண்மனையிலிருந்து வெளியேறினார் அவர்.
குடும்பத் துயரங்கள் அனைத்திலும் தனக்கு ஆறுதலாக இருந்த கணவர் பிலிப் கடந்த ஆண்டு இறந்தபோது எலிசபெத் மகாராணி நொறுங்கிப் போனார். கொரோனா காரணமாக அவரது இறுதிச்சடங்குகளும் எளிமையாகவே நடைபெற்றன.
தனிப்பட்ட வாழ்வில் சோகங்கள் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் மகாராணி சிரித்தபடியே இருக்க வேண்டும் என்பது மரபு. வெளிநாட்டுப் பயணங்களில் பல மணி நேரம் சிரித்தபடியே இருந்து, வாய் சுளுக்கிக்கொண்டு அவர் அவதிப்பட்டதுண்டு. அதே நேரம், அபார நகைச்சுவை உணர்வும் அவருக்கு இருந்தது. பிரமாதமாக மிமிக்ரி செய்வார். ஒரு கன்கார்டு விமானம் இறங்கும் ஓசையை அவர் மிமிக்ரி செய்து காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார். தன்னை அடிக்கடி சந்திக்கும் பலரிடம், அவர்கள் போலவே பேசிக் காட்டி மிரட்டியிருக்கிறார்.
‘ஆண்டின் சிறந்த முதியவர்’ என்ற பெருமைக்குரிய விருதை கடந்த ஆண்டு அவருக்குத் தருவதாக இருந்தார். 95 வயதில் இதை வாங்குவது பலருக்கும் இயல்பு. ஆனால், ‘நாம் மனதளவில் என்ன வயது என நினைக்கிறோமோ, அந்த வயதில்தான் இருக்கிறோம். மகாராணி இந்த விருதைப் பெறும் அளவுக்கு முதியவராகத் தன்னை உணரவில்லை. எனவே, தகுதியுள்ள வேறு யாருக்காவது விருதைக் கொடுத்துவிடவும்’ என்று பதில் அனுப்பியது அரண்மனை. அந்த மனநிலைதான் அவரை 96 வயது வரை வாழ வைத்திருக்கிறது.