சென்னை: இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் தற்சமயம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவரது மகன் மனோஜ் கூறியுள்ளார்.
சமீபத்தில் மருத்துவமனையில் இவரை இளையராஜா சந்தித்ததாகவும், தான் வெளிநாடு சென்று வருவதற்குள் மீண்டும் பாரதிராஜாவை பழைய மாதிரி பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் பாரதிராஜா மீது இளையராஜா எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பது போன்ற சம்பவம் ஒன்றைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
முதல் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மார்க்கெட்டில்லாத காலகட்டம் அது. இருப்பினும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தது. அப்படி பாரதிராஜா தொடங்கிய படம்தான் முதல் மரியாதை. அதற்கு முன்னர் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்திருந்த சிவாஜி கணேசன் பாக்கியராஜின் டைரக்ஷன் அணுகுமுறையை வித்தியாசமாக பார்த்தாராம். காரணம் சீன் பேப்பர்களை முதல் நாளே கொடுக்கமாட்டாராம். படபிடிப்பு நடக்கும் நாளன்றுதான் கொடுப்பாராம்.
பாக்யராஜே பரவாயில்லை
புதிய தலைமுறையினர் புதிதாக பணிபுரிகிறார்கள் என்று அந்தப் படத்தில் பணியாற்றினாராம் சிவாஜி. பிறகு பாக்யராஜின் குருநாதரான பாரதிராஜாவின் படத்தில் நடிக்கும்போதுதான் பாக்யராஜே பரவாயில்லை என்று அவருக்கு தோன்றியதாம். அவராவது சீன் பேப்பர்களை காலையில் கொடுப்பாராம் ஆனால் பாரதிராஜா திடீரென்று சூரியன் மறையும் திசையிலிருந்து நடந்து வரச் சொல்வாராம். எதற்கு நடக்கச் சொல்கிறாய் ஏன் என்று கேட்டால், சார் சூரியன் மறைஞ்சிட்டு இருக்கு சீக்கிரம் வாங்க. எதுக்குன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்றுதான் கூறுவாராம்.
பிரம்மித்த சிவாஜி
சிவாஜியும் பாரதிராஜா கேட்டதற்காக நடித்துக் கொடுத்தாராம். அதன் பின்னர் படம் பார்த்தபோதுதான் பிரம்மிப்படைந்தாராம் சிவாஜி. காரணம் என்ன காட்சி எதற்கு நடிக்கிறோம் என்று தெரியாமல் நடந்த சென்ற ஷாட் கூட பின்னணி இசையோடு பார்த்தபோது சிறப்பாக நடித்தது போல் இருந்ததாம்.
இளையராஜா மறுப்பு
இந்தப் படத்தை பார்த்த இளையராஜாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அது பாரதிராஜாவின் சொந்த படம் என்பதால், படம் எப்படியும் ஓடாது அதனால் நான் சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுக்கிறேன் என்று மொத்த வேலையும் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் படமோ மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் பாரதிராஜா ஒரு நாள் சம்பளத்தை எடுத்துக் கொண்டு இளையராஜாவிடம் சென்றபோது உன் படம் பிடிக்கவில்லை என்றுதான் நான் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் வெற்றி பெற்றுவிட்டது. அதனால் நான் கூறியது போல வாங்காமல் இருப்பதுதான் ஞாயம் என்றாராம். பிடிக்காத ஒரு படத்திற்கு எப்படி பின்னணி இசை செய்திருக்கிறார் பாருங்கள் என்று பாரதிராஜா ஒரு பேட்டியில் இளையராஜா பற்றி வியப்பாக கூறியிருப்பார். பல நபர்களுக்கு இலவசமாக இசையமைத்துக் கொடுத்திருக்கும் இளையராஜா சுறா படத் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஆரம்ப காலத்தில் தயாரித்த இரண்டு மூன்று படங்களுக்கு சம்பளமே வாங்கவில்லையாம்.