வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும் என காவல்துறையினருக்கு வழிகாட்டு விதிகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குற்றம் சாட்டப்பட்ட தங்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல் துறையினர் துன்புறுத்துவதாகவும், அதற்குத் தடை விதிக்கவும் மனுவில் கோரியிருந்தனர்.
இதையும் படியுங்கள்: ராகுல் காந்தியின் யாத்திரை 2024ல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரணைக்காகவே அவர்களை அழைத்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு போதிய அதிகாரங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளதாகவும், எனவே விசாரணை நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும் கூறினார்.
இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாகவும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, இது போன்ற சூழலில் நீதிமன்றம் தலையிடும் என கூறினார்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்காக வழிகாட்டுதல் விதிகளை வகுத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும், அவ்வாறு அனுப்பப்படும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம், இடம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்துப்பூர்வமாகக் குறிப்பெடுத்து வைக்க வேண்டும். விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்த கூடாது. இவ்வாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil