சென்னை: தமிழக அரசின் புதிய திருத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி புதிய மின்கட்டணம் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், கட்டண உயர்வுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில்,மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, புதிய மின் கட்டணத்தை அமல்படுத்தப்படுகிறது. அதேவேளையில், 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மின் கட்டண உயர்வு விவரம்:
> 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1 யூனிட் கட்டணம்: ரூ.4.50, 200 முதல் 300 யூனிட்கள் வரை ஒவ்வொரு 50 யூனிட்டுக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 300 முதல் 400 யூனிட்டுகளுக்கும் ஒரு கட்டணமும், 400 முதல் 500 யூனிட்கள் வரை புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி:
- 100 யூனிட்கள் வரை கட்டணம் இல்லை
- 101 – 200 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.4.50
- 201 – 250 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.6.00
- 251 – 300 யூனிட்கள் வரை1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.8.00
- 301 – 400 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ. 9.00
- 401 – 500 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.10.00
- 500 யூனிட்களுக்கு மேல் 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.11.00
தொழில், கடைகளின் மின்கட்டண உயர்வு விபரம்:
- தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
- தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50
- அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00
- தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50
- கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
- மாதம் நிலையான கட்டணம் ரூ.550