திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கடந்த சில திங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில், தன்னுடைய சொந்த கட்சி எம்.பி மஹுவா மொய்த்ராவை, கண்டித்தது அரசியல் பேசுபொருளாகியிருந்தது. ஏற்கெனவே, பா.ஜ.க மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவரும் மொய்த்ரா, தற்போது கட்சிக்குள்ளிருந்தே இத்தகைய பேச்சை எதிர்கொண்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பா.ஜ.க-வும் மொய்த்ராவை விமர்சித்திருக்கிறது.
இதுகுறித்து மேற்குவங்க பா.ஜ.க இணைப் பொறுப்பாளர் அமித் மாள்வியா ட்விட்டரில், “இடதுசாரிகளுக்கு விருப்பமானவரும், காளியை இழிவுபடுத்தியவருமான மஹுவா மொய்த்ரா, அவருடைய சொந்தக் கட்சியில் ஒருநபராகக் கூட இல்லை. மம்தா பானர்ஜி, பொதுவெளியில் அவரை அவமானப்படுத்துவதை ஒரு முக்கிய விஷயமாக்குகிறார். இதனடிப்படையில், விரைவில் ராகுல் காந்தியைப் போல அவரும் தெருக்களில் இறங்குவார். ஆனால், அது முற்றிலும் வேறு காரணத்துக்காக இருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
மஹுவா மொய்த்ரா 2016-ல் கரீம்பூரில் இருந்து திரிணாமுல் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 -ல் அவர் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து எம்.பி.யானார். கரீம்பூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதி கிருஷ்ணாநகர் எல்லைக்கு உட்பட்டது. நதியா மாவட்டத் தலைவராக மொய்த்ரா ஒரு காலத்தில் முழுப் பகுதியையும் கவனித்து வந்தார்.
இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மொய்த்ரா மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இப்போது மாவட்டத் தலைவர் பதவியை வகிக்கவில்லை என்றாலும், கரீம்பூரில் செல்வாக்கு இருக்கிறது. கரீம்பூரில் தொடர்ந்து பணியாற்றியதால் மம்தா, அவரை கண்டிதததாக சொல்லப்பட்டது. அதாவது, மம்தா, “கரீம்பூர் உங்கள் ஏரியா அல்ல, அபுதாஹரின் பகுதி, அவர் பார்ப்பார். உங்கள் லோக்சபா தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள்” என்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து மஹுவா மொய்த்ரா, “என்னுடைய மக்களவைத் தொகுதியின் சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு கட்சியின் தலைவர் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, கரீம்பூரில் வளர்ச்சிப் பணிகளுக்கு அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.