தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன் தலைமையிலான பா.ஜ.க நிர்வாகிகள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தி நயினார் நாகேந்திரன் தலைமையிலான பா.ஜ.க நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்து பேசி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: வழக்கு விசாரணைக்கு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும்; காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4-5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பற்றி முதலில் பேசியது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, யாரெல்லாம் குற்றம் சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார். எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர். இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக் கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் பின், நாங்கள் மனசு மாறி விட்டோம். வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதை விட என்ன வேண்டும்? என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும் போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல் துறை உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil