சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் அபாயகரமாக பைக் வீலிங்கில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டையில் தொடங்கி ஜெமினி மேம்பாலம் வரை வாலிபர்கள் சிலர் வீலிங் செய்தபடியே அபாயகரமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக சென்னை போலீசாரின் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் பைக் வீலிங்கில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய அந்த வாலிபர்கள் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வீலிங் செய்தபடியே பைக் ஓட்டியவர்களின் வாகன பதிவு எண்களை எடுத்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் (19) மற்றும் முகமது சைபான் (19) என்பது தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பிரபலமான ஹைதராபாத்தைச் சேர்ந்த பினோஜ் என்பவர் சென்னை அண்ணா சாலை வழியாக வருவதை அறிந்து அவரைப் பார்க்க சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் பினோஜ் அண்ணா சாலையில் பைக் சாகசங்களில் ஈடுபடும்போது அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும், அவருடன் இணைந்து தாங்களும் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பைக் சாகசங்களின் ஈடுபட்ட பினோஜை பிடிக்க தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்து உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் பைக் சாகசங்கள் மற்றும் வீலிங்கில் ஈடுபட்ட வாலிபர்களை அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரம் பணியாற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குறைந்திருந்த சாகச செயல்பாடுகள், தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM