ஒரு கேள்வி – 3 வித்தியாச பதில்கள் அளித்த அரசு அலுவலகங்கள்! ஆர்.டி.ஐ-ல் அம்பலமான உண்மை!

சுங்க நுழைவு வரி மற்றும் பசுமை நுழைவு வரி வசூலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக முன்னாள் படை வீரர்களைக் கொண்டு சங்க நுழைவு வரி மற்றும் பசுமை நுழைவு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி வசூல் பணிகளில் பல முறைகேடுகள் நடத்தப்பட்டு சுமார் 2 கோடி ரூபாய் வரைக்கும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டு கடந்த 18.06.2022 மற்றும் 25.08.2022 ஆகிய தினங்களில் பிரத்தியேக செய்தி வெளியிட்டு இருந்தது. 25.08.2022 அன்று வெளியிடப்பட்ட செய்தியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் புதிய தலைமுறை வெளியிட்டது.
image
தீவிரமடையும் வரி வசூல் முறைகேடு விசாரணை:
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிப் பிரிவு அலுவலரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட துறை மூலமாக இந்த முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரி வசூல் பணிக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் நேரில் சென்று தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
image
RTI-இல் முன்னுக்கு பின் முரணாக பதில்கள்:
இந்த நிலையில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட வளர்ச்சி பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இரண்டு அலுவலகத்திலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், நமக்கு தரப்பட்ட பதில்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
கேள்விகளுக்கான பதில்களை பந்துபோல Pass செய்யும் அதிகாரிகள்:
அதாவது நாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரிசைப்படுத்தி பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில கேள்விகளுக்கான பதில்களை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலன் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதே கேள்விகளுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக தரப்பில்,இந்த கேள்விகளுக்கான தகவல்கள் இந்த அலுவலகத்தில் இல்லை என பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
image
ஒரு கேள்வி – 3 வித்தியாச பதில் அளித்த அரசு அலுவலகங்கள்:
அதாவது 3 வது கேள்வியாக நீலகிரி மாவட்டத்தில் வரிவசூல் பணிகளில் முன்னாள் வீரர்கள் அல்லாத பிறர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நமக்கு கொடுக்கப்பட்ட பதிலில் 4 பேர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களை ஏன் பிறருக்கு ஒதுக்கி உள்ளீர்கள் என மாவட்ட வளர்ச்சி பிரிவு அலுவலர் மணிகண்டனிடம் கேட்டபோது இந்த பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் யாரும் விண்ணப்பிக்க முன்வரவில்லை என கூறினார். இது குறித்து மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குநர் ரூபா சுப்புலட்சுமியிடம் கேட்டபோது, வரி வசூல் பணிகளுக்காக முன்னாள் படை வீரர்கள் தேவை என எங்கள் அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த கடிதமே, அறிவுறுத்தல்களோ தரப்படவில்லை என கூறியிருக்கிறார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களை, அவர்கள் அல்லாத பிறருக்கு ஒதுக்கியது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
image
கணக்கில் வராத அந்த ஆறாவது இயந்திரம் பற்றிய தகவல் எங்கே?
6 வது கேள்வியாக நாடுகாணி மற்றும் கக்கநல்லா சோதனை சாவடிகளில் வரி வசூல் பணிகளுக்காக எத்தனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரப்பிலிருந்து 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இரண்டு சோதனை சாவடிகளிலும் சேர்த்து 6 இயந்திரங்கள் உள்ள நிலையில், நாடுகாணி சோதனை சாவடியில் 6 வதாக பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் விவரங்களை குறிப்பிடாமல் விட்டுள்ளனர். எதற்காக 6 வது இயந்திரம் பயன்பாட்டில் இருப்பதை மறைத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தொழில்நுட்பக் கோளாறு என சொல்லி கொள்ளை நடக்கிறதா?
7 வது கேள்வியாக 17.06.2022 அன்று கக்கநல்லா சோதனைசாவடியில் தமிழக அரசின் முத்திரை இல்லாமல் ரசீதுகள் கொடுக்கப்பட்டது ஏன் என கேட்கப்பட்ட கேள்விக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமாக என பதிலளிக்கப்பட்டு இருக்கிறது. 8 வது கேள்வியாக கக்கநல்லா சோதனை சாவடியில் 17.06.2022 தேதிக்கு முந்தைய நாட்களில் இதுபோன்று தமிழக அரசின் முத்திரை இல்லாமல் ரசீதுகள் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலக தரப்பிலிருந்து நமக்கு பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் பலமுறை அரசின் முத்திரை இல்லாத ரசீதுகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் 16.05.2022 அரசின் முத்திரை இல்லாமல் கொடுக்கப்பட்ட டிக்கெட்டின் ஆதாரம் இருக்கிறது. ஒருவேளை அன்றைய தினமும் தொழில்நுட்பக் கோளாறு நேர்ந்து இருந்தால், ஏன் சம்பந்தப்பட்ட பணியாளர், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அன்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை யார் சரி செய்தார்கள் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. வரி வசூல் பணியில் இருப்பவர்களுக்கு இயந்திரத்தை பழுது பார்க்கும் அனுமதி கொடுக்கபட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
10வது கேள்விக்கு விதவிதமாக நூதன பதிலளித்த அரசு அதிகாரிகள்:
10 வது கேள்வியாக ஏற்கனவே வரி வசூல் பணியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனரா, எந்த காரணத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற விவரங்களை கேட்டிருந்தோம். அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தரப்பட்ட பதிலில், முன்னாள் படை நலன் அலுவலகத்தில் இருந்து இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளும்படி கூறப்பட்டிருக்கிறது.
image
இதுகுறித்து மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் ரூபா சுப்புலட்சுமியிடம் கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு பதில் அளித்த அவர், வரிவசூல் மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு பணியில் உள்ளவர்களை விசாரிக்கவோ, அவர்களை பணி நீக்கம் செய்யவோ எங்கள் துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதே நேரம் எங்கள் துறையின் பணியும் அது கிடையாது என கூறினார். மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்காக பணியிடம் ஒதுக்கப்படும் போது அதற்கு தகுதியான முன்னாள் ராணுவ வீரர்களை பரிந்துரைப்பது மட்டுமே எங்களது பணி. எங்கள் அலுவலகத்தை பொறுத்த வரைக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் எங்கெங்கு தேவைப்படுகிறார்களோ அந்த இடங்களுக்கு அவர்களை பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுவது மட்டுமே எங்களது பணி. அப்படி பணியில் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை விசாரிக்கவோ, தண்டிக்கவோ, அவர்கள் நலன் சார்ந்து கூட்டங்களை நடத்தவோ எங்களுக்கு அதிகாரம் கிடையாது. அவர்களை விசாரிப்பது, ஒழுங்க நடவடிக்கை, பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளதாக திட்டவட்டமாக கூறிவிட்டார். ஒருவேளை வரி வசூல் செய்யும் பணிகளில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கும் எங்கள் அலுவலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
image
முறைகேடு – முன்னுக்கு பின் முரணாக பதில்கள் – முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்?
இரண்டு அலுவலகத்தில் இருந்தும் பெறப்பட்ட பதில்களை ஒப்பிட்டு பார்க்கும் போது முன்னுக்கு முரணாக உள்ளது. வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினர் எந்த துறை அதிகாரிகளின் கட்டுபாட்டில் இருந்தார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது. முறைகேடு தொடர்பான விசாரணை முடிந்து உண்மை வெளிபட்டால் மட்டுமே இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
– மகேஷ்வரன், ச.முத்துகிருஷ்ணன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.