சென்னை: தமிழில் பல டைம் ட்ராவல் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
24, இன்று நேற்று நாளை, டிக்கிலோனா போன்ற பல படங்கள் டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களாகும்
அதேபோல் சமீபத்தில் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட கதையுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கணம்.
சூர்யாவின் 24
2016 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 24. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா, நித்யா மேனன், போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை எழுதி இயக்கியவர் விக்ரம் குமார். டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.
விஷ்ணு விஷாலின் டைம் ட்ராவல்
2015 ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படமும் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படம் தான். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க அவருடன் மியா ஜார்ஜ் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்க, ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. டைம் ட்ராவல் படமாக இருந்தாலும் திரைக்கதையில் எந்த ஒரு சொதப்பலும் இல்லாமல் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தது இந்த திரைப்படம்.
சந்தானத்தின் டிக்கிலோனா
இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கிய டிக்கிலோனா திரைப்படம் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படமாக வெளியானது, சந்தானம், அனகா யோகி பாபு போன்ற பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம், காமெடி கலந்த படமாக இருந்தாலும் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை மட்டுமே இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது.
அமலாவின் கணம்
காமெடி, சயின்ஸ் பிக்சன், டைம் ட்ராவல் என்று எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் டைம் ட்ராவல் கலந்த அம்மா சென்டிமென்ட் இணைந்து கலவையாக வெளியான திரைப்படம் கணம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணம் திரைக்கதையில் எந்த ஒரு தொய்வும் இல்லாதது மட்டுமில்லாமல் சென்டிமென்ட் இந்த படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. 30 வருடங்கள் கழித்து நடிகை அமலா இந்த படத்தில் நடித்திருந்தாலும் அவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இன்றும் இருந்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் அமலாவுடன் இணைந்து, ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். விபத்தில் தன் அம்மாவை இழக்கும் ஷர்வானந்த் டைம் டிராவல் மூலம் தனது கடந்த காலத்திற்குச் சென்று தனது அம்மாவை காப்பாற்றுகிறாரா என்பதை சென்டிமென்ட் கலந்த எமோஷன் கதையாக இயக்கியுள்ளார் ஸ்ரீ கார்த்திக். வெறும் சயின்ஸ் பிக்சன் மட்டும் இல்லாமல் சென்டிமென்ட்டும் கலந்திருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.