குட்டையில் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து மாணவி வளர்த்த வளர்ப்பு நாய் சோகமாக அருகிலேயே அமர்ந்திருந்த சம்பவம் கண்கலங்க செய்துள்ளது.
ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில் உள்ள நத்தமா குட்டையில் குளிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு ஜணணி, 8ஆம் வகுப்பு ரட்சணாஸ்ரீ என பள்ளி மாணவிகள் 2 பேர் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகள் ஜனனி(14) 10ஆம் வகுப்பு மற்றும் அதே பகுதியில் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ 8ஆம் வகுப்பு இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அத்திப்பழகானூர் அருகே உள்ள நத்தமா குட்டையில் 2 மாணவிகளும் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் 2 மாணவிகளும் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குட்டையில் மூழ்கிய மாணவிகளின் சடலத்தை மீட்டெடுத்தனர். அப்போது அங்கு ஓடி வந்த மாணவி ரட்சணாஸ்ரீ வளர்த்த வளர்ப்பு நாய், பொதுமக்களுடன் ஓடிவந்து மாணவியின் சடலத்தை விட்டு நகராமல் சோகத்துடன் அமர்ந்திருந்தது. பின்னர் மாணவி சடலத்தை எடுத்து செல்லும் போது பின் தொடர்ந்து வேகமாக வளர்ப்பு நாயும் ஓடி சென்றது பார்போரை கண்கலங்கச் செய்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பள்ளி மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியுள்ளதால், சிறார்கள் அதன் அருகே செல்வதை பெற்றோர் தடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM