ஐதராபாத்: தெலங்கானா முதல்வரை திட்டி பேசியதால் அசாம் முதல்வரின் மைக்கை டிஆர்எஸ் நிர்வாகி பிடுங்கிய விவகாரம் குறித்து பதிலளிக்க உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. பாஜக தலைவரும், அசாம் முதல்வருமான ஹேமந்த் பிஸ்வா சர்மா, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றார். ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வளையத்தில் உள்ள அவர் மேடையில் பேச முயன்ற போது, ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) நிர்வாகி நந்து வியாஸ் என்பவர் மேடைக்கு சென்றார்.
முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா பேச முயன்ற போது, திடீரென அவரது மைக்கை கழற்றி எடுத்துக் கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள், நந்து வியாசை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தினர். உடனே மேடைக்கு வந்த போலீசார் நந்து வியாசை வியாஸ் அபிட் சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘அசாம் முதல்வர், எங்கள் முதல்வரை (சந்திரசேகர ராவ்) தேவையில்லாமல் திட்டத் தொடங்கினார்.
என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் மேடையில் ஏறி, அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கினேன்’ என்றார். இந்நிலையில் அசாம் மாநில முதல்வரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடி குறித்து பதிலளிக்க தெலங்கானா மாநில தலைமை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. அதேபோல் அசாம் அரசும், சிஆர்பிஎப் தலைமையிடமும் தெலங்கானா உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளன.