திருவள்ளூர்: திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் பல்வேறு துரித நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கடந்த 06.09.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ததோடு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று (10.09.2022) திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து வனத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் இணைந்து மாற்றுப்பாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கள ஆய்வில் வேலூர் மண்டல இணை ஆணையர் திரு. சி. லட்சுமணன், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் திருமதி பி.விஜயா, வனச்சரக அலுவலர் திரு. என். அருள்நாதன், வன ஆய்வர் திரு. கே. ஓம் குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு. விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் திரு.அன்பரசு, திருத்தணி வட்டாட்சியர் திருமதி வெண்ணிலா, நில அளவர் திரு. கோவிந்தராஜ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.