மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது – நடிகர் மனோஜ்
பாரதிராஜா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவதாக கூறிய மகன் மனோஜ்
இயக்குநர் பாரதிராஜா பணத்திற்கு வழியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தவறான தகவல் பரவுவதாக நடிகர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து விட்டதால் வீடு திரும்ப உள்ளார்.
ஆனால் அவர் சிகிச்சைக்கு பணமில்லாததால் தான் மருத்துவமனையிலேயே இருக்கிறார் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘எனது அப்பா பாரதிராஜாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது.
இதற்கிடையில், ஏதோ அவர் பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
தயவுசெய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
பாரதிராஜா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். எல்லாமே அவருக்கு சினிமா தான். சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம் எல்லாம். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நான்கைந்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் நிறைய பேர் நேரில் வந்து அவரைச் சந்தித்தனர்.
அவர் சிகிச்சையில் இருந்தபோதே அவர் நடித்த படங்கள் எல்லாம் போட்டுக் காட்டினார்.
மீண்டும் ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார். விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்க உள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் நுரையீரல் பாதிக்கப்பட்டு வந்த இயக்குநர் பாரதிராஜா தற்போது முழுமையாக குணமடைந்திருப்பதாகவும், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாரதிராஜா சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் விரைவில் குணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.