மதுரை: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் திருவேதிக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில்; திருவேதிக்குடி கிராமத்தில் உள்ள வேத குறு ஈஸ்வர சுவாமிகள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பிரதாப சிம்ம ராஜாவிற்கு சொந்தமானவை.
வேத குறு ஈஸ்வர சுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன் முயற்சி செய்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மக்கள் கடுமையான போராட்டம் நடத்தியதை தொடந்து அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட தொடங்கியுள்ளனர். எனவே கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்திய மூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இது போன்று கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள்; இந்த வழக்கில் ஒரு விரிவான விசாரணை தேவை. எனவே மனுதாரர் தரப்பில் போதுமான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும், அதேபோல அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் மேலும் விரிவான விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.