உதகை: உதகையின் அடையாளமான ஆதம் நீரூற்று பகுதியில் சேதமடையாத நடைபாதையை, மேலும் உயர்த்தும் வகையில் போடப்பட்டு வரும் கான்கிரீட் தளத்தால் அப்பகுதியின் அழகு பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆதம் செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள இந்த நீரூற்று பாரம்பரிய மிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உதகையின் நுழைவுவாயில் நகரத்தின் அடையாளமாக ஆதம் நீரூற்று உள்ளது. இந்த நீரூற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இரவு நேரங்களில், விளக்கு ஒளியில் ஜொலிக்கும் இந்த நீரூற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணிகளின் வழக்கம்.
இந்த நீரூற்று பகுதியில் மாற்றம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியை மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் பாதுகாத்து வருகின்றன.
இந்நிலையில், உதகை நகரின் அடையாளமான இந்த நீரூற்று பகுதியை ஒட்டியுள்ள நடைபாதை நன்றாக உள்ள நிலையில், அதனை உயர்த்தும் வகையில் கான்கிரீட் கட்டுமானப்பணிகள் நடக்கின்றன.
இதனால், அப்பகுதி அலங்கோலமாகி உள்ளது. இதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும் போது, ‘ஆதம் நீரூற்றை சுற்றி அலங்கார வேலி அமைக்கப்பட்டது. அதை ஒட்டி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் நடந்து, நீரூற்று முன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். இரவு நேரத்தில் ஒளி வெள்ளத்தில் இந்த நீரூற்றை காண்பது அழகு. இத்தகைய எழில்மிகு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபாதை மீது சுமார் ஒரு அடி உயரத்துக்கு கான்கிரீட் போட்டு, அப்பகுதியை அலங்கோலப்படுத்தி உள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக மக்கள் நடைபாதையில் காத்திருப்பார்கள். நடைபாதை உயர்த்தப்பட்டதால், காத்திருப்போர் வேலியை தாண்டி நீரூற்று பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இதனால், நீரூற்றுக்கு பாதிப்பு ஏற்படும். யாரையும் கேட்காமல் இத்தகைய கட்டுமானம் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த கட்டுமானத்தை தடுத்தி நிறுத்தி, பழைய நிலையே தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்திடம் கேட்டபோது, ‘புகாரின் பேரில் அப்பகுதியை ஆய்வு செய்தேன். அப்பகுதியில் அத்தகைய கட்டுமானம் தேவையில்லாதது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, நீரூற்றின் எழில் குன்றாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விட்டுள்ளேன்’ என்றார்.