திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் என்.எஸ்.கே.நகர் ராஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் பாலசூர்யா (12). இவர், மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவர் பாலசூர்யா தனது தாய் சாந்திமணியுடன் மணலியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வல்லூர் நான்கு வழி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பாலசூர்யா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் தாய் கண் எதிரே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று, பாலசூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.