கோவை மாவட்டத்தில் சிகரெட் பற்ற வைத்த போது தீப்பிடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி உஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரஞ்சித்(24). இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் சிகரெட்டை பற்ற வைத்த போது அதிலிருந்து எதிர்பாராதவிதமாக தீ அவரது உடையில் பற்றியுள்ளது.
தீயானது உடல் முழுவதும் பரவியதை அடுத்து ரஞ்சித் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரஞ்சித் உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.