புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ’ எனும் இந்தியாவை இணைக்கும் தேசிய ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். 2 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 12 மாநிலங்களில் நடைபெறும் இந்த யாத்திரையில் 22 முக்கிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இவற்றில் மொத்தம் உள்ள 129 மக்களவை தொகுதிகளில் 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு 28 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், காங்கிரஸின் சிக்கலான காலங்களில் தென் மாநிலங்களே அக்கட்சிக்கு பக்க பலமாக இருந்துள்ளன. பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், அவரது மகன் சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோல்விற்ற கால கட்டத்தில் காங்கிரஸிடம் 153 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர்.
அவற்றில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 92 ஆக இருந்தது. பிறகு 1978 மக்களவை இடைத் தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி பெரும் வெற்றி பெற்றார். அடுத்து 1980 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அப்போது பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதியாக ஆந்திராவின் மேடக் இருந்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பட்டா பர்ஸோலில் விவசாயிகள் யாத்திரையையும், குஜராத்தில்சத் பவனா யாத் திரையையும் இதற்கு முன்பு ராகுல் நடத்தியுள்ளார். எனினும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், 2017-ல் குஜராத், 2019-ல் உ.பி. ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. எனவே, இதுபோன்ற யாத்திரைகளை முக்கியப் ஆயுதமாக காங்கிரஸ் கருதுகிறது.
ஏற்கெனவே தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ், 1982-ல் சைதன்ய ரத யாத்திரையை நடத்தி அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார். 2004-ல் ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை நடத்தி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். அதே பாணியில் ஒய்எஸ்ஆர் மகன் ஜெகன்மோகன் ரெட்டியும் 2017-ல் யாத்திரை நடத்தி, மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவரது கட்சியே வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது.
மேலும், அக்டோபர் 2, 2012-ல் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு வஸ்துநா மீ கோசம் (வருகிறேன் உங்களுக்காக) எனும் பாத யாத்திரையை நடத்தினார். ஏப்ரல் 13, 2013-ல் முடிந்த யாத்திரைக்குப் பின்னர் 2014 சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது. இந்த வரலாறுகளை கணக்கிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடங்கிய பாத யாத்திரைக்கு தென் மாநிலங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.