இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றிய ஏராளமான நினைவுகள், சம்பவங்கள், அவரின் வரலாறு, அவர் கடந்து வந்த சவால்கள், சந்தித்த விமர்சனங்கள் எனப் பலவற்றைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவர் 1997-ல் தமிழகம் வந்தபோதுதான் `மருதநாயகம்’ பட விழா நடந்தது. அப்போது நம் விகடன் இதழ்களில் அது குறித்து வெளியான கட்டுரைகளையும் ஒரு ரவுண்டு பார்த்துவிடுவோமா?! `மருதநாயகம்’ குறித்த சுவாரஸ்யங்கள், ராணி எலிசபெத் விரும்பிய காஞ்சிப் பட்டு, நம்மூர் தோசை எனப் பல விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
19.10.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…
எலிசபெத் ராணிக்கு காஞ்சிப் பட்டு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சென்னை விஜயத்தின்போது காஞ்சிபுரமும் செல்கிறார். காஞ்சிபுரம் விசிட்டின் போது பட்டுப்புடவை தயாரிப்பை அவர் பார்க்கவிருக்கிறார். இதற்காக இங்கிலாந்து தாதரகக் கமிஷனர் காஞ்சிபுரம் சென்று ஒத்திகை நடத்திவிட்டு வந்திருக்கிறார்.
சென்ற முறை… அதாவது முப்பத்தாறு வருடங்களுக்கு முன்பு எலிசபெத் ராணி தமிழகம் வந்திருந்தபோதே அவர் காஞ்சிபுரம் செல்ல விரும்பினார். ஆனால், அந்தச் சமயத்தில் பாதுகாப்புக் கருதி, கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்கள்.
இங்கிலாந்து ராணி அப்போது காஞ்சிபுரம் போகவில்லை என்றாலும், தமிழக அரசின் சார்பில் காஞ்சிப் பட்டுச்சேலை ராணியைத் தேடி வந்தது. பச்சையும் இல்லாமல், பழுப்பும் இல்லாமல் அழகான அல்லி கலரில் யாளி, மயில், யானை என்று ராணிக்கென்றே ஸ்பெஷலாக அதை டிஸைன் செய்திருந்தவர், அப்போதைய காஞ்சி நெசவாளர்கள் மையத்தின் உதவி இயக்குநரான என். வீரப்பன்.
சென்னையின் ராதா சில்க் எம்போரியம் ராணிக்கு வழங்கிய பட்டுப் புடவையை டிஸைன் செய்தவரும்கூட இதே வீரப்பன்தான்! இரண்டு புடவைகளையும் இங்கிலாந்து ராணி பாராட்டியதைப் பற்றி இன்னமும் மாறாத பெருமை வீரப்பனுக்கு இருக்கிறது.
அப்புறம், வீரப்பன் நெசவாளர்கள் மையத்தின் இயக்குநராகி ஓய்வும் பெற்றுவிட்டார். இப்போது காஞ்சிபுரத்திலேயே சுங்குவார்பேட்டைப் பகுதியில் புதுப்புது டிஸைன் உற்பத்தி மற்றும் பட்டுச்சேலைத் தயாரிப்பு வேலையில் தனியாக இறங்கிவிட்டார்.
இந்திரா காந்தி விரும்பி அணிந்த கைத்தறிப் புடவைகள் யாவும் வீரப்பனால் தயாரிக்கப்பட்டவையே. சோனியா காந்திக்கும் இவரது தயாரிப்பில் உருவான புடவைகள் என்றால் மிகவும் இஷ்டமாம்.
ஜாக்குலின் கென்னடி தமிழ்நாடு வந்திருந்தபோது, காஞ்சிபுரத்தில் வீரப்பனைச் சந்தித்து இரண்டு மணிநேரம் இவருடைய பட்டுப்புடவை டிஸைன் வரையும் வேகம், ஓவிய நேர்த்தி ஆகியவற்றை ரசித்து வியந்திருக்கிறார்.
“இந்திரா காந்தியம்மா சாகும் போது கட்டியிருந்த சேலைகூட நான் அவருக்குன்னே டிஸைன் பண்ணி தயாரித்து எடுத்துப்போய்க் கொடுத்த சேலைதான். அந்தப் புடவை துப்பாக்கிக் குண்டுகளைச் சந்திக்கப் போறது அப்போ எனக்குத் தெரியாமப் போச்சே!”
இதைச் சொல்லும் போது முதியவர் வீரப்பனுடைய குரலில் ஒரு நடுக்கம், முகத்தில் ஏராள சோகம்!
– ஜே.வி.நாதன், படம்: ‘சூப்பர்’ செல்வம்
19.10.1997 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து…
‘மருதநாயகம்’ கதை முடிவானவுடனேயே அந்தப் படத் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணியை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் கமல். ‘மருதநாயகம்’ கதையை லண்டனில் உள்ள லைப்ரரி ஒன்றில் எஸ்.சி.ஹில் என்பவர் எழுதிய ‘யூசுப்கான் தி ரிபெல் கமான்டென்ட்’ என்ற புத்தகத்தைப் படித்துதான் கமல் தெரிந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். அங்கேயே உட்கார்ந்து மருதநாயகம் எந்த அளவுக்கு ஆங்கிலேய அரசுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார் என்ற தகவல்களைத் திரட்டி இங்கிலாந்து ராணியின் தனி அலுவலர்களிடம் கொடுத்திருக்கிறார். அந்த ஸ்கிரிப்ட்டை படித்த பிறகே ராணி எலிசபெத், ‘மருதநாயகம்’ பட விழாவுக்கு வர ஒப்புக் கொண்டாராம். அதே சமயம் “இந்திய அரசின் அழைப்பை ஏற்று இந்தியா வரும்போது உங்கள் விழாவிலும் கலந்து கொள்கிறேன். இதற்கென தனியாக வர முடியாது!” என்றும் சொல்லியிருக்கிறார் ராணி.
அக்டோபர் 16 அன்று படத்துவக்க விழா என்பதையும் பிரிட்டிஷ் அரசுதான் முடிவு செய்ததாம். அதில் கமலுக்கே தெரியாமல் அமைந்துவிட்ட சிலிர்ப்பூட்டும் ‘தற்செயல்’ 1764-ம் ஆண்டு இதே அக்டோபர் 16-ம் தேதிதான் மருதநாயகம் மதுரையில் தூக்கில் போடப்பட்டாராம்!
16-ம் தேதியன்று ராணியுடன் அமர்ந்து படம் (டிரெய்லர் மற்றும் சில காட்சிகள்) பார்க்கப் போகும் இருநூறு வி.ஐ.பி-க்களின் பயோடேட்டாவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ராணியுடன் உட்கார்ந்து டிரெய்லர் பார்ப்பதற்காக பாரதிராஜாவுக்கும் பாலசந்தருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் கமல். அவர்கள் ஒப்புதல் தெரிவித்து பயோடேட்டா அனுப்பாததால் திரும்ப சாதாரண அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறதாம். ராணி டிரெய்லர் பார்த்து முடித்த பிறகு மருதநாயகம் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
முதலில் மூன்று நிமிடங்கள் தயார் செய்யப்பட்ட டிரெய்லர் ராணியின் விசிட் உறுதி செய்யப்பட்ட பிறகு ஐந்து நிமிடங்களாக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டாயிரம் ஆர்ட்டிஸ்ட்டுகள் மூன்று யூனிட்டோடு ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ‘தாலா’வுக்குப் போய் வந்திருக்கிறார் கமல். அதற்காக பன்னிரண்டு ரயில் கன்டெய்னர்களில் அந்தக்கால உடைகள், ஆர்ட் டைரக்ஷன் சமாசாரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாம்!
‘மருதநாயகம்’ படத்தில் கமல் போட வேண்டிய உடைகளை டிஸைன் செய்வதற்காக சரிகா ஆழ்வார்பேட்டையில் தனி வீடே எடுத்திருக்கிறாராம். ராஜ்கமல் ஆபீஸ் தவிர, க்ரீன்வேஸ் ரோட்டில் தனி ஆபீஸே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டு கமல் செயல்படுத்திக் சொண்டு வரும்போது இன்னொரு பக்கம் சர்ச்சை பிரமுகர் நகைமுகன், “இந்தப் படம் தேவர் இன மக்களுக்கு எதிரானது. பூலித்தேவனை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்த துரோகி, அதனால் இந்தப் படத்தை எடுக்க விடமாட்டோம்” என்று தடாலடியாகக் குழப்பம் கிளப்பியிருக்கிறார்.
இதற்கெல்லாம் மேலாகக் கேள்விப்பட்ட ஒரு ‘சிக்’கான தகவல் மருதநாயகம் டிரெய்லரில் அரையே அரை செகண்டு நேரத்துக்கு முழு நிர்வாணமாக வந்து போகிறார் ஒரு வெளிநாட்டுப் பெண். கதைப்படி அவர் யார்… என்ன என்றெல்லாம் தெரியவில்லை.
26.10.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து… (`அனு, அக்கா, ஆன்ட்டி’ பகுதியில் வெளியானது)
”என்னிக்கும் இல்லாத திருநாளா நீயே இன்னிக்கு கிச்சனுக்குப் போய் டீ போட்டுக் கொண்டு வர்றியே… என்ன விசேஷம்?” – அனுவைப் பார்த்து ரமா கிண்டலடிக்க, பின்னே… அவ்வளவு பெரிய மகாராணியே தன் குடையைத் தானே தூக்கிப் பிடிச்சுட்டு நடக்கிறாங்க. ஆஃப்டர் ஆல் ஒரு டீ போட மாட்டேனா…?”
“ஆன்ட்டி… எழுபது வயசிருக்குமா எலிசபெத் மகாராணிக்கு…?” டேபிள் மேல் கிடந்த பேப்பர்களில் விதவித போஸ்களில் இருந்த ராணியின் படங்களின் மேல் பார்வையைப் படரவிட்டாள் ரமா.
“எழுபத்து ஒண்ணரை வயசு. முப்பத்தாறு வருஷத்துக்கு முன்னே இவங்க மெட்ராஸுக்கு வந்தப்போவே நான் பார்த்திருக்கேன்…”
“ராணி தாஜ் ஓட்டல்லேயே சாப்பிட்டாங்களா…? இல்லே, மைக்கேல் ஜாக்சன் கணக்கா கூடவே சமையல்காரங்களையும் கூட்டிட்டு வந்துட்டாங்களா…?”
“தாஜ்லதான்… ராணி விசிட்டுக்கு தாஜ் ஓட்டல் ஆறு மாசத்துக்கு முன்னேயே ரெடியாயிடுச்சாம். ராணி எதைக் கேட்டாலும் எந்த நேரத்திலும் தரணும்னு உலகத்தில் இருக்கற ஒவ்வொரு இடத்துல இருந்தும் ஒவ்வொண்ணும் வரவழைச்சு இருக்காங்க. விதவிதமா ஆறு டைப் மெனு ரெடி பண்ணி பக்கிங்ஹாம் பேலஸுக்கு அனுப்பிச்சு, அங்கேயிருந்து அனுமதியோட வந்த அயிட்டம் மட்டும்தான் சமைச்சிருக்காங்க. ராணிக்கு மக்காச்சோளம் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த ஒருவித சிங்கப்பூர் கோழி ரொம்ப இஷ்டம். இதுக்குன்னே சிங்கப்பூர் கோழிகளை வரவழைச்சிருக்காங்க.”
“நம்மூர் சாப்பாடு ஏதும் சாப்பிடலையாமா..?”
“ஏன் சாப்பிடாம…? நம்ம தோசையோட வித்தியாசமான சைஸைப் பார்த்துட்டு இது என்னன்னு கேட்டு விசாரிச்சு நல்லா சட்னி தொட்டுட்டுச் சாப்பிட்டாங்களாம். அவங்க சாப்பிட்ட நம்ம ஊரு அயிட்டம் தோசை மட்டும்தான். தாஜ் ஓட்டலோட எக்ஸிகியூடிவ் செஃப் நடராஜன் சொன்ன தகவல்தான் இதெல்லாம்!”
“‘மருதநாயகம்’ விழாவுல கமல், மருதநாயகம் காஸ்ட்யூம்லேயே வந்து அசத்தலா ஒரு எஃபெக்ட் தந்தார் போலிருக்கே…!”
“ஆமா… முன்னால வளைஞ்சு கம்பீரமா கமல் போட்டிருந்த ‘ஷூ’ ராணியை ரொம்பக் கவர்ந்துடுச்சு போல… குனிஞ்சு அவர் ஷூவை ரசிச்சு ‘வெரி நைஸ்’ன்னு பாராட்டிட்டிருந்தாங்க. ‘எல்லாம் இவங்க செலக்ஷன்தான். இவங்கதான் படத்தோட காஸ்ட்யூமர்’ன்னு பக்கத்துல இருந்த மனைவி சரிகாவைக் காட்டி ராணிக்கு அறிமுகப்படுத்தி வெச்சார் கமல். ராணி அங்கிருந்து போனதுமே அப்புறம் கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டிக்கு மாறிட்டார். ‘அசத்திட்டீங்க தலைவா… உங்க கறுப்பு சட்டையிலேயும் மேடையில நீங்க வெச்சிருந்த பெரியார் படத்திலேயும் நீங்க யாருன்னு சொல்லிட்டீங்க’ன்னு கைகொடுத்து சத்யராஜ்கூட கமலைப் பாராட்டினார்.”
“ஆன்ட்டி… காஞ்சிபுரத்துல ராணியை ஆச்சரியமா பார்த்தாங்களோ இல்லியோ, ராணிக்குப் பக்கத்துல வந்தவரை வெச்ச விழி வாங்காம பார்த்துட்டிருந்தாங்க கரைவேட்டிக்காரங்க.”
“யாரை..?”
“வேற யாரை…? காபியைக்கூட ‘குழம்பி’ன்னு சொல்லிட்டிருக்கற நம்ம தமிழ்க்குடிமகனைத்தான்… படு ஸ்டைலா ராணியுடன் இங்கிலீஷ் பேசின அழகைத் தான் அப்படிப் பார்த்துட்டிருந்தாங்க. அந்த ஒரு நாள் அவர் இங்கிலீஷ்குடிமகனா ஆயிட்டாரு!”
“கோயிலுக்கு வெளியே ஒரு பெரிய பந்தல் போட்டு அங்கே சும்மா மாடலுக்காக ரெண்டு தறியை வெச்சிருந்தாங்க. மாதிரிக்குச் சில பட்டுப் புடவைகளையும் புடவை கட்டின சில மாடலிங் பெண்களையும் நிறுத்தியிருந்தாங்க. எவ்வளவு மெல்லிய தங்க இழைகள் இவ்வளவு மென்மையான புடவைக்குள் நுழைந்து எப்படியொரு அழகு வருதுன்னு ஆச்சரியப்பட்டு, அதோட மென்மையைக் கையில தொட்டுப் பார்த்து மெதுவா தலையாட்டி ரசிச்சார் ராணி.”
“ராணிக்கு யாரும் பட்டுப்புடவை பிரசன்ட் பண்ணலியா..?”
“ஏன் இல்லாம…? ராணி கலாக்ஷேத்திரா போய் டான்ஸ் புரோகிராம் பார்த்தப்பவே கலாக்ஷேத்திராவில் நெய்த ஒரு அரக்கு கலர் பட்டுப்புடவையை வெள்ளித் தாம்பாளத்தில் வெச்சுத் தந்தாங்க. காஞ்சிபுரத்திலேயும் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட ரெண்டு பட்டுப்புடவை ராணிக்குத் தந்தாங்க.”
“மகாராணி விஷயம் போதும்… நடன ராணிகள் மூணு பேரு சென்னையை இன்னொரு பக்கம் கலக்கின விஷயம் பத்திச் சொல்லவா…? மூன்றரை வயசில் சலங்கைகட்டி சுதாராணி ரகுபதி ஆட ஆரம்பிச்சு ஐம்பது வருஷம் முடிஞ்சுடுச்சாம். அதைக் கொண்டாடறதுக்காக அவரோட பரதாலயா பள்ளி பிரமாதமா மூணு நாளா விழா கொண்டாடினது. முதல் நாள் முப்பெரும் கிளாஸிகல் டான்ஸர்களான பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன், சுதாராணி ரகுபதி சேர்ந்து ஒரே மேடையில் ஆடினாங்க.”
“ஐயோ… நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்.”
“‘விராலி மலைக் குறவஞ்சி’ன்னு நாடகத்தோட பேரு… வயசை மீறின உற்சாகத் துடிப்போட அந்த மூணு பேரும் உற்சாகத் துடிப்போட ஆடின டான்ஸைப் பார்க்க சூப்பர் ஸ்டாரும் வந்திருந்தார்.”