கொல்கத்தா: மொபைல் கேம் செயலி வழியாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை நேற்று கொல்கத்தாவில் ஆறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இந்தச் சோதனையின் போது ரூ.17 கோடி ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘இ-நக்கெட்ஸ்’ என்ற மொபைல் கேம் செயலி வழியாக பணமோசடி செய்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் மீதும் மேலும் சில நபர்கள் மீதும் பெடரல் வங்கி புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது அவரிடமிருந்து ரூ.17 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கவே தொழிலதிபர் அமீர் கான் இ-நக்கெட்ஸ் செயலியை உருவாக்கியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்து பவர்களுக்கு ஆரம்பத்தில் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நம்பிக்கை அடைந்த பயனாளர்கள் பலர், பெரும் பணத்தை இந்தச் செயலியில் உள்ள தங்கள் கணக்கில் போட் டுள்ளனர். திடீரென்று அவர்கள் கணக்கு செயலிழந்தது போனது. அதன் பிறகு அதில் போட்ட பணத்தை அவர்களால் திருப்பி எடுக்க முடியவில்லை.
இந்திய சந்தையில் சீன நிறுவ னங்களால் உருவாக்கப்பட்ட சூதாட்டம் மற்றும் கடன் செயிலிகள் 100-க்கு மேல் இருப்பதாகவும் அவற்றின் மூலம் இந்தியாவிலிருந்து பல நூறு கோடி ரூபாய் சீனாவுக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் செயலியை உருவாக்கியவர்களுக்கும் சீன நிறுவனங்களால் உருவாக் கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கடன் செயலிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் இவ்வழக்கை விசாரித்து வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சோதனை தொடர்பாக திரிணமூல் கட்சி அமைச்சரும் கொல்கத்தா மேயருமான பிர்ஹாம் ஹக்கீம், “தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனைநடத்துவதன் மூலம் தொழிலதிபர்களை நம்பிக்கை இழப்புக்குத் தள்ளுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக பாஜக தலைவர் ராகுல் சின்ஹா, “இந்தச் சோதனையால் பிர்ஹாம் ஹக்கீமுக்கு என்ன பிரச்சினை? அவருக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிக்கும் தொடர்பு இருக்கிறதா. பிறகு ஏன் அவர் கவலைகொள்கிறார்?” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “மேற்கு வங்கத்தில் நிறைய பணம் இருக்கிறது. நீங்கள் திரிணமூல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்குச் சென்றால், உங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.