சண்டிகர்: ஹரியாணாவில் காவல் பெண் அதிகாரியை மகளிர் ஆணைய தலைவி வெளியே போக சொல்லி விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது
ஹரியாணாவின் கைத்தால் பகுதியில் நேற்று முன்தினம் மாநில மகளிர் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் ஆணைய தலைவி ரேணு பாட்டியா, மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கணவன், மனைவி விவாகரத்து விவகாரம் விசாரிக்கப்பட்டது.
அப்போது வழக்கை விசாரித்த காவல் பெண் அதிகாரி கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரை, ஆணைய தலைவி ரேணு பாட்டியா கடுமையாக கடிந்து கொண்டார். “பாதிக்கப்பட்ட பெண் உடல்ரீதியாக தகுதியில்லை என்று குற்றம் சாட்டி கணவர் விவாகரத்து கோருகிறார். இதற்காக அந்த பெண்ணை 3 முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் பெண்ணின் கணவருக்கு ஒருமுறைகூட மருத்துவ பரிசோ தனை நடத்தப்படவில்லை. இது ஏன்” என்று மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கேள்வி எழுப்பினார்.
இதற்கு காவல் துறை பெண் அதிகாரி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த ரேணு “நீங்கள் கூட்டத்தில் இருந்து வெளியே போகலாம்” என்று உத்தரவிட்டார். காவல் பெண் அதிகாரி வெளியேற மறுக்கவே, அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.