தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன்.
இவர் 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை.
‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்திய மகாகவி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாரதியாரின் நினைவை போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி, ‘மகாகவி நாள்”-ஆக கடைபிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.