130 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் வசதியின் கீழ் மருந்துகளைப்
பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மருத்துவப் பொருட்களை அவசரமாக கொள்வனவு
செய்வதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
300 மருந்துகளின் பட்டியல்
அதன்படி அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு
அமைச்சு 300 மருந்துகளின் பட்டியலைத் தயாரித்து வருகிறது.
பொருத்தமான இந்திய விநியோகஸ்தர்களை கண்டறிவதில் உள்ள சிரமம், இலங்கையில்
விநியோகஸ்தர்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஸ்டேட் பேங்க் ஒஃப்
இந்தியா மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவையே
இந்தியாவில் இருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள
தடங்கல்களுக்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அவசர நடவடிக்கையாக இந்த மாத இறுதிக்குள் அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக மருந்துப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தைக்
கருத்தில் கொண்டு தனியார் துறை இறக்குமதியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.