Toronto: `சென்னையின் தி நகரைப் போன்று காட்சியளித்த மார்க்கம் வீதி' – தெரு விழா ஒரு பார்வை

கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொராண்டோவில் தமிழர்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தெரு விழா, ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தின் நாட்களில் கோலாகலமாக நடைபெற்றது.

கனடிய தமிழர் பேரவை (CTC) எனும் இலாப நோக்கமற்ற அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் சராசரியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழியில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு, எட்டாவது முறையாக இந்த ஆண்டு கனடாவின் மார்க்கம் நகர வீதிகளில் கனடாவாழ் தமிழர்களின் உற்சாக வரவேற்போடு நடைபெற்றது. ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளில் இருந்தும் சுமார் 2,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த தெரு விழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்வு குறித்து கனடியத் தமிழர் பேரவை செயலாளர் நாதன் வீரசிங்கம் கூறுகையில், “டொராண்டோ நகரிலே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இது ஒரு பல் கலாசார மக்கள் வாழ்கின்ற நகரம். நாங்கள் எங்களது கலை, கலாச்சாரம், பண்பாடு, உணவு வகைகள் ஆகியவற்றின் சிறப்பை வருங்கால சந்ததியினருக்கும் மற்ற சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தெரியப்படுத்த ஆண்டுதோறும் இந்நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார். இந்தியாவுக்கு வெளியே தமிழர்களுக்காக நடத்தப்படும் மாபெரும் விழாவாக டொராண்டோ தமிழர் தெரு விழா அறியப்படுகிறது.

தெரு விழா

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வு:

தமிழர்களின் மரபுப்படி, இந்த தெரு விழாவானது குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கப்பட்டது. பாவாடை தாவணியும், வேட்டி சட்டையும் அணிந்தபடி கனடாவிலேயே பிறந்த வளர்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளம் தலைமுறையினர், கனடாவின் தேசிய கீதமும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி நிகழ்வில் தமிழ்மணக்கச் செய்தனர்.

பழங்குடி இனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கனடாவில், அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அவர்களது பாரம்பரியபடி, நிகழ்வு நடைபெறும் இடத்தில் கெட்ட எண்ணங்கள் நீங்கி நன்மைகள் பிறக்க வேண்டும் என்பதைக் குறிக்க புகையிலையில் நெருப்பு மூட்ட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அப்புகையை கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந்த், ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி எம்.பி திரு. கேரி அனந்தசங்கரி, மார்க்கம் – தார்ன்ஹில் தொகுதி எம்.பி.பி திரு. லோகன் கணபதி, இலங்கையின் யாழ்ப்பாண நகர மேயர் திரு. விசுவலிங்கம் மணிவண்ணன், மட்டக்களப்பு தொகுதி எம்.பி திரு. சாணக்கியன் இராசமாணிக்கம், மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநில சட்டப் பேரவையின் துணை சபாநாயகர் திரு. ரவி முனுசாமி உள்ளிட்ட பல அரசு துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

டொராண்டோ தமிழர் தெரு விழாவின் முக்கியத்துவம் குறித்து கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரத்யேகமாக விகடனிடம் பேசுகையில், “பன்முகத்தன்மையும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அமைப்பையும் கொண்ட நாடு கனடா. உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களை வரவேற்கும் நாடு கனடா என்பதற்கு தமிழர் தெரு விழா ஒரு எடுத்துக்காட்டு. நானும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவள் தான். எனவே, ஒரு தமிழ் கனேடியனாக இன்று இந்நிகழ்விலே கலந்துகொள்வதில் பெருமையடைகிறேன்” என்று நம்மிடம் கூறினார். மேலும் அவர், தனக்கு இட்லி, தோசை மற்றும் உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும் என்றும் இந்நிகழ்விலேயே அவற்றை உண்ண ஆவலாய் காத்திருப்பதாகவும் அவர் நம்மிடம் கூறினார்.

சென்னையின் தி நகரைப் போன்று காட்சியளித்த மார்க்கம் வீதி:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள், கரும்பு ஜூஸ், ஐஸ் கிரீம் ட்ரக்குகள், சுண்டல், வடை, மசாலா டீ, கிழங்கு வகைகள், பெண்களுக்கான அலங்கார பொருட்கள், புடவை சந்தை என டொராண்டோ தமிழர் தெரு விழாவில் இடம்பெற்ற கடைகளின் பட்டியல் பட்டியல் நீண்டுகொண்டே போனது. இவை அனைத்தும் சென்னையின் பரபரப்பான தி நகர் பகுதியை நினைவூட்டுபவையாகவும் அமைந்தது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், இதன் மூலம் தொலைந்த நட்பை மீட்டெடுத்தவர்கள், புதிய நட்பை தேடிக்கொண்டவர்கள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தமிழர் தெரு விழா ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

தெரு விழா – கனடா

“தாயகத்தைப் பிரிந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு சமூகம் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இந்த நிகழ்வைப் பார்க்கிறோம். எனது கல்லூரி நண்பன் ஒருவனை ஆறு ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வின் மூலமாகத்தான் மீண்டும் பார்க்க முடிந்தது. தமிழர் தெரு விழா மூலம்தான் அவர் கனடாவில் இருப்பதே தெரிய வந்தது. இங்கு நடக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், பல புதிய நபர்களை சந்திக்கவும் தமிழர் தெரு விழா மிகவும் உதவியாக இருக்கிறது” என்கிறார் கனடாவில் 9 ஆண்டுகளாக வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதீப்.

தமிழர்களின் கலாசாரத்தைப் பறைசாற்றும் நிகழ்வு:

தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம், வரலாறு, உணவு வகைகள் ஆகியவற்றை பறைசாற்றும் நிகழ்வாக அமைந்த இந்த தெரு விழாவில் தமிழர்களின் வரலாற்று சிறப்பைக் குறிக்கும் பதாகைகள், பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் திருவள்ளுவர், ஒளவையார், கண்ணகி போன்ற பல இலக்கிய கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்திய சிறுவர்களின் மேடைப்பேச்சும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களை ரசிக்கச் செய்தது.

இரண்டு நாட்களும் மாலை 5 மணி முதல் தொடங்கிய இசைக் கச்சேரி இரவு 11 மணி வரை மக்களின் ஆரவாரத்துடன் நடைபெற்றது. தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து ஏராளமான இசைக் கலைஞர்கள், தொழில்முனைவோர், தமிழ் ஆர்வலர்கள் என மார்க்கம் பகுதியே தமிழ்ச் சமூகத்தினரால் நிரம்பி வழிந்திருந்தது. இந்திய இசைக் கலைஞர் வி.எம். மகாலிங்கம், தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் திரு. மணிமாறன், பிகில் திரைப்படத்தின் ‘மாதரே’ பாடல் மூலம் திரைத்துறையில் அறிமுகமான கனடாவைச் சேர்ந்த பாப் பாடகி விதுசாயினி பரமநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மாலை வேளையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களின் செவிக்கு விருந்து படைத்தனர்.

தெரு விழா – கனடா

மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களுக்காக இந்த மாபெரும் தெரு விழா மட்டுமல்லாது மற்ற பல நிகழ்வுகளையும் தாங்கள் நடத்திக்கொண்டிருப்பதாக நம்மிடம் கூறினார் கனடிய தமிழ் பேரவை செயலாளர் திரு. நாதன் வீரசிங்கம். இதுகுறித்து விகடனிடம் பேசிய அவர், “எங்களுடைய செயல்பாடுகளில் முக்கியமான மற்றொன்று என்னவென்றால், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நாங்கள் தமிழ் இருக்கையை ஏற்படுத்தி இருந்தோம். அமெரிக்காவின் ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழுவும் கனடிய தமிழர் பேரவையும் இணைந்து இந்த பெரும் பணியை நிறைவேற்றி இருக்கிறோம். இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் நிதி உதவி செய்திருந்தார்கள். தமிழக அரசும் இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது. தமிழ் மொழியை வளர்க்கவும், கனடாவாழ் தமிழ் மக்களை ஒன்றிணைக்கவும் இது போன்ற பல நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

கனடாவாழ் தமிழர்களை இணைக்கும் பாலம்:

கனடாவில் கோடைக்காலம் முடிவடைந்து இலையுதிர்காலம் நோக்கி நகர்கையில், தமிழர் தெரு விழா போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வது உற்சாகமளிப்பதாகவும், நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிப்பதாக உள்ளது என்றும் நம்மிடம் பேசிய புலம்பெயர் தமிழர்கள் சிலர் கூறினர்.

இந்நிலையில், 36 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் முனைவர் பாலா சுவாமிநாதன் இந்த நிகழ்வு குறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். “கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் தமிழர்களுக்காக நடத்தப்படும் முக்கிய நிகழ்வுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கிலும் நாங்கள் இங்கு வந்தோம். முதலில் மக்களை சந்திக்க வேண்டும் என்ற சிறிய நோக்கமே எனக்கு இருந்தது. ஆனால், இங்கு வந்து பார்த்ததில், தமிழர்கள் பெரிய ஆளுமையோடும் தொழில்முனைவோராகவும் இருக்கிறார்கள். வேலை வாங்கும் சமூகமாக இருந்துவந்த நாம் வேலை கொடுக்கும் சமூகமாக மாறி வருவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இவற்றையெல்லாம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வாழும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

கனடாவில் நாளுக்கு நாள் தமிழ்ச் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தாயகத்தைப் பிரிந்து தொலைவில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழி மூலம் இணைப்பை ஏற்படுத்துவதில் இது போன்ற நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் எந்த ஐயமுமில்லை. – கனடாவிலிருந்து ஐஸ்வர்யா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.