ராஞ்சி: ஜார்கண்ட்டில் கடும் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தம்பியும், எம்எல்ஏவுமான பசந்த் சோரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் அம்மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல் அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் தான் குவாரி முறைகேட்டில் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் முதல்வர் பதவியை பயன்படுத்தி இதனை செய்ததாக புகார்கள் எழுந்தன.
தேர்தல் ஆணையத்தில் புகார்
அதாவது கடந்த கடந்த 2021ல் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் குவாரி ஒதுக்கப்பட்டதாவும், நிலக்கரி குவாரி ஒதுக்கீட்டில் அவர் ஆதாயம் பெற்றதாகவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பைய்ஸிக்கு தேர்தல் ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. அதில் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆளுநர் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் ஜார்கண்ட் அரசியலில் குழப்பமான சூழல் எழுந்தது. ஜார்கண்ட் மாநிலம் தேசிய அளவில் கவனம் பெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
இதற்கிடையே ஜார்கண்ட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஹேமந்த் சோரன் தனது எம்எல்ஏக்களை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார். மேலும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் கடந்த 5ம் தேதி சிறப்புக்கூட்டம் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினர். இதில் மொத்தமுள்ள 81 எம்எல்ஏக்களில் அரசுக்கு ஆதரவாக 48 பேர் வாக்களித்தனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 18(3 எம்எல்ஏக்கள் மேற்கு வங்கத்தில் பணத்துடன் கைது) மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்தனர். பாஜகவின் 25 எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியின் 3 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார்.
அண்ணன் இல்லை தம்பி
இந்நிலையில் தான் ஜார்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பதில் அவரது தம்பியும் தும்கா தொகுதி எம்எல்ஏவுமான பசந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆளுநர் ரமேஷ் பைய்ஸிக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர் பங்குதாரராக உள்ள குவாரி தொடர்பான வருமானத்தை தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தகுதி நீக்கம்
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை ஆகஸ்ட் 29ம் தேதி முடிந்த நிலையில் தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 9(ஏ) இன் கீழ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அம்சத்தை ஆளுநர் ரமேஷ் பைய்ஸிக்கு ஆணையம் அனுப்பிஉள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் பசந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கும் நடவடிக்கையை ஆளுநர் ரமேஷ் பெஸ்ஸி மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவரது தம்பியான பசந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து ஜார்கண்ட் அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.