கொல்கத்தா: அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகா கம்பீருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளிநாடு செல்ல முயன்ற அவரை குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்துக்குள் சிக்கி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எங்களை அச்சுறுத்தும் நோக்கில் விசாரணை முகமைகளை தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. எனினும், முறைகேடு புகார்கள் இருப்பதன் காரணமாகவே விசாரணை நடத்தப்படுவதாகவும் இதில் பழிவாங்கும் அரசியல் எதுவும் இல்லை என்பது பாஜகவின் வாதமாக உள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை
மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பனர்ஜியிடம் அண்மையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தி வருகிறது. சுமார் 1,300 கோடி ரூபாய் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
தடுத்து நிறுத்தம்
அதேபோல், அபிஷேக் பானர்ஜியின் மனைவியின் சகோதரியான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, செப்டம்பர் 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், பாங்காங் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த மேனகா கம்பீரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பண மோசடி வழக்கு
மேனகா கம்பீருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி குடியேற்ற அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்துவிட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று சம்மனை அதிகாரிகள் வழங்கியதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த 5 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக மேனகா கம்பீருக்கு சம்மன் விடுக்கப்பட்டு இருந்தது.
விசாரணை நடத்தவில்லை
ஆனால், கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக தனக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேனகா கம்பீர் முறையிட்டு இதற்கு அனுமதியும் பெற்றார். இதன்படி அவருக்கு கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ ஏற்கனவே மேனகா கம்பீரிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் அமலாக்கத்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை.