5 எம்.பி.க்களின் கடிதம் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு வாக்களிப்போரின் பட்டியல் வழங்கப்படும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்தலில் 9,000 நிர்வாகிகள் வாக்களிப்பார்கள் என்றும் அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரதியுத் போர்டோலாய், அப்துல் காலிக் ஆகியோர் கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கட்சித் தலைவர் தேர்தலை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் எதிரொலியாக காங்கிரஸ் தலைமை சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வாக்களிக்கவுள்ள 9,000 பிரதிநிதிகளின் பட்டியல் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த பட்டியல் வரும் 20ம் தேதி முதல் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கிடைக்கும் என கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையின் இந்த முடிவுக்கு சசிதரூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிலில் தான் திருப்தியடைந்துள்ளதாகவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வருத்தத்துடன் பெரியார் மண்ணிலிருந்து பிரிந்து செல்கிறேன்’ – கேரளா சென்றார் ராகுல் காந்தி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM