அகமதாபாத்: ‘நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒன்றிய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய ஜெய்ஜவான், ஜெய்கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் என்ற மந்திரத்தோடு முன்னேறி வருகின்றது. இந்த அமிர்த காலத்தில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்றுவதற்கு பல்வேறு வழிகளிலும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நமது ஆராய்ச்சியை உள்ளூர் அளவில் கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் உள்ளூர் பிரச்னைகளுக்கு உள்ளூர் தீர்வை காண்பதற்கு புதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நவீன கொள்கைகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். மேலும் விஞ்ஞானிகளுடன் அதிக ஒத்துழைப்பு அவசியமாகும். உயர்கல்வி நிறுவனங்களில் புத்தாக ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசின் முயற்சியால் இந்தியாவில் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையானது 2015ம் ஆண்டு 81வது இடத்தில் இருந்து தற்போது 46ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.