நெல்லை: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் 110 விதியின் கீழ், ஆதி தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் வகையில் அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் தொல்லியல் அருங்காட்சியகம் பிரமாண்ட முறையில் நெல்லையில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
நெல்லை- கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலைப் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டுள்ள நெல்லையின் `வியூ பாயின்ட்’ பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைகிறது. நெல்லையின் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி தாமிரபரணியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை பகுதிகளின் அகழாய்வுப் பொருட்களை காட்சிப்படுத்தி நெல்லையில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் 13 ஏக்கர் பரப்பளவில் குமரி நெடுஞ்சாலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது நெல்லையின் ‘வியூ பாயின்ட்’ பகுதியாகும். சிவகளை அகழாய்வில் 185 பொருட்களும், கொற்கையில் 812 பொருட்களும், ஆதிச்சநல்லூரில் 1620 பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 106 தாழிகளும் அடங்கும். மேலும் 3 இடங்களில் கிடைத்த பாசிமணி, சுடுமண் காப்பர் பொருட்கள், நாணயம், இரும்பு பொருட்கள், பானை ஓடுகள் மற்றும் வெளிநாடுகளுடன் தொடர்பு இருந்ததற்கான சான்று உள்ள பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.
இது அருங்காட்சியகமாக மட்டும் இல்லாமல் சிறந்த சுற்றுலாதலமாகவும் அமைக்கப்படும். அதற்கு ஏற்ப திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் மையம், குகையில் மனிதர் வாழ்ந்த மாதிரிகள், கட்டிட கலாசார மாதிரிகள், குகைகோயில் மாதிரிகள் அடங்கியதாக இருக்கும். நெல்லை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் வகையில் அமையும். ஸ்மார்ட் சிட்டி நெல்லையின் வியூ பாயின்ட் பகுதியான இங்கு இருந்து மாநகரை பார்வையிட்டு ரசிக்கும் வகையில் டெலஸ்கோப் அமைக்கப்பட உள்ளது. வெறும் பொருட்களை மட்டும் வைக்கும் இடமாக மட்டுமல்லாமல் பலரும் வந்து பயன்படும் வகையில் உருவாக்கப்படும் என்பதால் இது நெல்லையின் புதிய அடையாளமாக மாறும்.
உலக நாடுகள் தமிழர்களின் பாரம்பரிய தொட்டில் நாகரீகத்தை அறிந்துகொள்ள இந்த அருங்காட்சியகம் சிறந்த மையமாக இருக்கும். மேலும் துலுக்கர்பட்டியில் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருநை அருங்காட்சியகம் எப்படி அமையும் என்பதை விளக்கும் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாநில உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டு குழு கூட்டத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.33.02 கோடியில் ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திட்ட மதிப்பீட்டின்படி ரூ.33.02 கோடியில் ரூ.15.02 கோடியை வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தும், ரூ.18 கோடியை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் இருந்தும் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.