காங்கயம்: காங்கயம் அருகே உள்ள அரசம்பாளைத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த பகுதியின் சங்ககால பெயர் பட்டாலியூர் ஆகும். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் இங்கு காட்சிகொடுத்ததாகவும் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.
இக்கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு முன்புறம் ஐந்து முகங்களும் பின்புறம் யாரும் பாக்க முடியாதபடி ஒருமுகம் உள்ளது மேலும் சிறப்பாகும். சங்ககால கோவில் என்பதற்கு கட்டிட அமைப்பே தற்போதும் சான்றாக உள்ளது.
சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரராஜேந்திர சோழன், அபிமான சோழன், ராஜ ராஜ சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளன. பட்டாலி வெண்ணீஸ்வரர் கோவிலில், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், கல்வெட்டுகள் காணப்படுகிறது.
மேலும் இத்திருக்கோவிலில் வெள்ளித் தேரோட்டம் நடத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. வள்ளி நாயகியை முருகன் கவர்ந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து, மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10, 13ம் நூற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, ஒன்றிய அரசு ஆய்வு செய்துள்ளது. இந்த கோவிலை சுவற்றில் உள்ள கற்களில், பண்டைய கால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர்களில் உள்ள கல்வெட்டுகளில் அதன் வரலாற்று சிறப்புக்கான சான்றுகள் உள்ளன. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் நிறைந்த பழமையான கோவிலாக உள்ளது.
சுமார் 50 ஆண்டுக்கு முன் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு கோவிலை புதுப்பிக்க பாலாலயம் நடத்தப்பட்டது. இதையடுத்து, பழமையான சாமி சிலைகளை சிமெண்ட் சீட் கூரை கட்டிடத்தில் பதுகாப்பில்லாமல் வைத்துள்ளனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறையினர் இக்கோவிலை புனரமைக்க இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. 9 ஆண்டாக சாமி சிலைகள் அங்கேயே உள்ளன. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் சுமார் 80 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பழமையாக கோவில் தற்போது 88 சென்ட் இடத்தில் தான் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிவன்மலை கோவில் மற்றும் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது இந்த கோவில் பாலாலயம் செய்து பணிகள் நடைபெறாமல் இருப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்வது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை ஈரோடு உதவி ஆணையர் அன்னகொடியிடம்(பொறுப்பு) கேட்ட போது, பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.