மதுரை: தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும் கர்நாடக மாநிலத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையாலும் காய்கறிகள் வரத்து குறைந்ததால் அத்தியாவசிய காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்று தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையும், கேரட் ரூ.100க்கு நேற்று விற்பனையானது.
தமிழகத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அடுத்து மதுரை பரவை காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் போன்றவை மிகப்பெரிய சந்தைகளாக திகழ்கின்றன. பரவையில் மொத்த கொள்முதலுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் மொத்த கொள்முதலுக்கும், சில்லறை வியாபாரத்திற்கும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு தினசரி 700 டன் காய்கறிகள் விற்பனைக்கு வரும். தற்போது 400 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.
அதுபோல், தக்காளியை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு மதுரைக்கு 20 லோடு லாரி தேவைப்படும். ஒரு லாரி 12 டன் இருக்கும். ஆனால், தற்போது 6 லோடு லாரி மட்டுமே வருகிறது. அதனால், தக்காளி விலை நேற்று காலை ரூ.50க்கும், மதியம் ரூ.40க்கு விற்பனையானது. அதுபோல் கேரட் கிலோ ரூ.100க்கு விற்பனையானது. மிளகாய் ரூ.90, மல்லி ரூ.100, இஞ்சி ரூ.80, பாகற்காய் ரூ.40 முதல் ரூ.50, வெண்டைக்காய் ரூ.30, சீனியவரக்காய் ரூ.25 முதல் ரூ.30, அவரைக்காய் ரூ.60 முதல் ரூ.80, கத்திரிக்காய் ரூ.50 முதல் ரூ.60, பீர்க்காங்காய் ரூ.40 முதல் ரூ.50, பீன்ஸ் ரூ.100, முட்டைகோஸ் ரூ.30, உருளை ரூ.50, சேம்பு ரூ.40 விற்பனையானது.
காய்கறிகள் விலையும் கட்டுப்பாடில்லாமல் உயர்வதால் நடுத்தர, ஏழை மக்கள், காய்கறிகள் வாங்கி சமையல் செய்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். கனமழை பெய்யும் போதும், டீசல் விலை உயர்வு ஏற்படும்போது காய்கறிகளின் வரத்து குறைவு தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி வியாபாரிகள் காய்கறிகளின் விலையை அதிரடியாக உயர்த்தி வருகின்றனர். தற்போது தமிழக்தில் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்கள் பெய்த மழையையும், கர்நாடகா, ஆந்திராவில் பெய்யும் மழையையும் சுட்டிக்காட்டி காய்கறிகள் விலை தற்போது உயர்ந்துள்ளது.
மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வியாபாரி சின்னமாயன் கூறியதாவது: ”மழைக்கும், தக்காளிக்கும் ஒருபோதும் சேரவே சேராது. அதனாலேயே தக்காளி விலை உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் கடந்த 10 நாளாக பெய்த மழைக்கு தற்போது காய்கறிகள் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களுக்கு பிறகே காய்கறிகள் தெளிவாகவும், அதிகமாகவும் வரத்தொடங்கும். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு தக்காளி செடிகள் பல அழிந்து உற்பத்தி குறைந்தது. உள்ளூர் தக்காளி வரத்து இப்படி குறையும்போது கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளியை வரவழைப்போம். ஆனால், தற்போது தமிழகத்தைவிட ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே விலைவாசி உயர்ந்துவிட்டது.
அங்கிருந்து தக்காளியை கொண்டு வரமுடியவில்லை. கர்நாடகாவில் தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.600க்கு விற்கிறது. இந்த தக்காளி முதல் தரத்தை சேர்ந்தவை. ஆனால், தற்போது மதுரை சந்தைகளில் விற்பது மூன்றாம்தர தக்காளிதான். பொதுவாக முதல் தர தக்காளிகள் உள்ளூர் சந்தைகளுக்கு வருவதே இல்லை. முதல் தக்காளிகள் கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கம். அந்த தக்காளியை இங்கு கொண்டு வந்துவிற்பனை செய்தால் கட்டுப்படியாகாது. அதனால், குறைத்து கொடுக்க தரமான தக்காளியைதான் வாங்கி வந்து விற்கிறோம். தக்காளி இன்னும் விலை அதிகமாகும். தற்போது உடுமலைப்பேட்டை, தொப்பம், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை சந்தைக்கு தக்காளி வருகிறது. தற்போது அங்கேயே 15 கிலோ பெட்டி 400க்கு விலை போகிறது. கூடுதல் விலைக்கு காய்கறிகள் வாங்கி வந்து விற்க முடியாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.