`ஒரு பொன்னுக்கு புகுந்தவீட்ல கிடைக்குற மரியாதையை வச்சுதான் அவளோட மானமும் மரியாதையும் இருக்கு’
– இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் வெளியாகியுள்ள விருமன் படத்தில் முக்கியமான இடமொன்றில் ஹீரோவிடம் அவர் அம்மா பேசும் வசனம் இது. சொல்லிவிட்டு, கணவனால் ஏமாற்றப்பட்ட – கைவிடப்பட்ட அப்பெண், தற்கொலை செய்துகொள்கிறார். அந்த தற்கொலைக்கு எந்த சட்டமும் நியாயம் கேட்கவில்லை. மாறாக மகன் பழிவாங்க நினைக்கிறார். அதைநோக்கியே அவர் வளர்க்கவும் படுகின்றார். அதுவும் படித்து வாழ்வில் முன்னேறியெல்லாம் அவர் தன் தந்தையை பழிவாங்க மாட்டார். `குத்திடவா, குத்தி கிழிச்சிடவா’ என படம் நெடுக கத்தியோடு அலைந்து, புத்திமதி சொல்லி பழிவாங்குவார்!
தாயாக சரண்யா பொன்வன்னன் நடித்திருக்கிறார். மகனாக (ஹீரோவாக) கார்த்தி. சரண்யா பொன்வன்னன் காட்சி, சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிறது. அதாவது 2000-ஐ ஒட்டிய காலகட்டம். சரி, அன்றைய காலகட்டத்தில் என்ன சூழ்நிலையோ, அதை அப்படி இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார் என நினைத்துக்கொண்டு (!), அடுத்த சீனுக்குள் சென்றோம்.
2022-ல் நிகழும் ஒரு நிகழ்வு. ஒரு ஊர் பஞ்சாயத்தில் வைத்து சீர்வரிசை சொன்னபடி கொடுக்காததால் மகனையும் மருமகளையும் பிரிக்க நினைக்கிறார் வில்லன் பிரகாஷ்ராஜ். அங்கு வருகிறார் நம்ம ஹீரோ கார்த்தி. அப்போது அவர் சொல்கிறார், “அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி… பொம்பளைகளை பின்னாடிவிட்டு, ஆம்பளைக முன்னாடி போகனும்னு எதுக்குயா சொன்னாங்க? `என்னை நம்பி வந்த பொன்னை, கண்ணு கலங்காம கலங்கரை விளக்கா எப்டி வச்சிருக்கேன்’னு சொல்லாம சொல்றதுக்குதான்யா’’ என்று! பின், `எதையும் எதிர்பார்த்து வாழ்றவன் ஆம்பள இல்ல, எதிர்த்து நிக்கிறவன் தான் ஆம்பள’ என ஆண் என்பவன் எப்படி இருந்தால் அவன் ஆண் என்று பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார்.
சரி, விஷயத்துக்கு வருவோம். ஹீரோ பக்கம் பக்கமாக பேசியபின்னும்கூட அங்கிருக்கும் அவருடைய அண்ணன், இவர் பேச்சை ஏற்பதாக தெரியவில்லை. பொறுத்து பார்த்துவிட்டு, அவரிடம் இறுதி அஸ்திரமாக, `அவங்க சொன்னதை கேட்டா (இவர் சொல்வதை கேட்காவிட்டால்), அவங்களையும் குத்துவேன்; உன்னையும் குத்துவேன்’ என மிரட்டுகிறார். இதன் பின் அந்த அண்ணன் மனம் மாறுகிறார். அண்ணியோடு வாழ்கிறார். இப்படி ஆண்கள் நினைத்தால்மட்டுமே, பெண்களுக்கு நிம்மதி கிடைக்கிறது `விருமன்’ படத்தில். உதாரணத்துக்கு, இந்த அண்ணி கதாபாத்திரத்துக்கு கார்த்தி பேசுவார். அண்ணன் மனம் திருந்தி – அதன் பின் அண்ணிக்கு நிம்மதி கிடைக்கிறது. சரண்யா பொன்வண்ணனுக்கு, அந்த சூழலும் இல்லை. அவர் பேசாமல் நமக்கெதற்கு வம்பு என தற்கொலை செய்துகொள்கிறார். `பெண்ணை பாதுகாக்கும்’ மீட்பர் கதாபாத்திரங்களை தமிழ் சினிமா எப்போது விட்டொழிக்கும் என்று தெரியவில்லை! விருமனை பொறுத்தவரை, எதற்கெடுத்தாலும் நாயகனே குரல் கொடுக்கிறார். சம்பந்தப்பட்ட பெண்கள் யாரும் பேசக்கூட செய்வதில்லை. ஏதேனும் ஓரிரு பெண் பாத்திரங்களாவது சுயமரியாதைக்காக கொஞ்சம் பேசியிருந்தால், ஆறுதலாகவாது இருந்திருக்கும்! அதிதி மட்டும் படத்தில் ஆங்காங்கே பேசுகிறார். ஆனால் அவரும் பேச வேண்டிய இடத்தில் பேசுவதில்லை. (முத்தம் கொடுத்து பஞ்சாயத்தை முடிக்கிறார்)
இயக்குநர் சார், பெண்களுக்கு கொஞ்சம் பேச்சு வரும். அதை மறந்துட வேண்டாம் என கேட்டுக்குறோம். ஏன் இதை சொல்ல வேண்டியுள்ளது என்றால், பெண்களுக்கு ஒரு பிரச்னை வரப்போ, அதக்கூடவா அவங்களே கேள்வி கேட்கக்கூடாது? அப்படி என்னங்க சார் உங்க சட்டம்?
சரண்யா கதாபாத்திரம் தற்கொலை செய்து இறப்பதெல்லாம், இன்னும் மோசமான உதாரணம். அவர் தனித்து வாழ்ந்து காண்பித்து, பிரகாஷ்ராஜை ஜெயிப்பது போன்று காட்டியிருக்கலாம். எமோஷனலாக இருப்பதற்காக இயக்குநர் அப்படியொரு காட்சியமைப்பை வைத்தாரா என்று தெரியவில்லை. அப்படி வைத்திருந்தால், சார்… `தனித்து வாழ்ந்து, என் உயிரை விட – உன் வார்த்தையும் வியாக்கியமும் எனக்கு பெருசில்ல’ எனக்காட்டுவதைவிடவா நீங்கள் அமைத்த கதாபாத்திரம் எமோஷனலானது? ஆமாம் என்பீர்களேயானால், ஸோ சாரி. அப்படியல்ல. இன்றும் இதே தமிழகத்தில் சுயமரியாதையோடு தனித்து வாழ்ந்து ஜெயித்த பெண்கள், ஏராளம் உள்ளனர். உங்கள் முந்தைய படங்களிலேயே அப்படியான பெண்களை நீங்களே காட்டியிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
வீட்டு வேலை செய்யும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டு (அதுவும் பலவந்தமாகத்தான் என்பது தனி சோகம்), சரண்யாவை விரட்டிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். அந்த பெண்ணும், எதுவுமே பேச மாட்டேன் என்கிறார். `மானம் போனப்பின்ன, நான் என்ன செய்ய க்கா?’ என அப்பாவியாக கேட்கிறார் சரண்யாவிடம். ஏனோ… படத்தில் எந்தப் பெண்ணும் தன் உரிமைக்காக கூட பலவந்தப்படுத்தப்படும் இடத்தில்கூட பேச மாட்டார்கள் போல. அவ்வளவு சுய மரியாதை இழந்து என்ன செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. சுயமரியாதையின்றி வாழும் வாழ்க்கையை, `பெண் தன்மை’ என புனிதப்படுத்துவதெலாம், நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதே எங்கள் பார்வை.
சுமார் 100 ஆண்டுகளை கடந்த இந்த தமிழ்சினிமா, ஏதோ இப்போ இப்போதான் `இதை செஞ்சாதான் ஆண், இப்படி இருந்தாதான் ஆண், இதுதான் ஆம்பளத்தனம்’ போன்ற ஆதிக்க மனப்பான்மை கொண்ட வசனங்களை தவிர்த்துக்கொண்டு வருகிறது. சமூகமும்கூட, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக இதுபோன்ற பாலின கட்டுப்பாடுகளை உடைத்து வருகிறது. இப்படியான ஒரு மாற்றம் நிகழ்ந்துவரும் சூழ்நிலையில், இப்படி போகிற போக்கில் பெண்ணடிமை செய்கைகள் தான் `ஆண்மை’ என்று ஹீரோ உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரம் வழியாகவே பேசுவது எப்படி சரியாகும்? இயக்குநர் தான் பதில்சொல்ல வேண்டும்.
ஹீரோ கதாபாத்திரம் தான் இப்படியென்றால், படத்தின் முக்கிய வில்லன் (பிரகாஷ்ராஜ்) இன்னும் ஒருபடி மேல் சென்று, சக வில்லனுக்கு (ஆர்.கே.சுரேஷூக்கு) புடவை வாங்கி கொடுக்கிறார். கொடுத்துவிட்டு, வீர ஆவேசமாக(?) `நல்ல சேலை வாங்கி கட்டிக்கோ’ என்கிறார். அதற்கு ஆர்.கே.சுரேஷ், `நான் என்ன பொம்பளையா?’ என்கிறார். பிரகாஷ்ராஜ் சும்மா இருப்பாரா? இல்லைல்ல.! அதான் அவர் பங்குக்கு அவரும் சரிக்கு சமமாக, `அப்போ என்ன நீ ஆம்பளையா? அவன் (ஹீரோவை சொல்கிறாராம்) பின்னாடியே போயிட்டு, இப்போ வந்து பொம்பளையா, ஆம்பளையானு பேச்சு பேசுற நீ (ஆர்.கே.சுரேஷ்-ஐ கேட்கிறார்)…! நீ ஆம்பளையா இருந்தா, அவனை மொதல்ல அடி’ என்கிறார். இதைக்கேட்கும் ஆர்.கே.சுரேஷூக்கு, கோவம் தாங்கவில்லை. தன்னை ஆண் இல்லை என கூறியதாலும் – பெண்ணின் ஆடையை அணிய சொன்னதாலும், வேகமாக பிரகாஷ்ராஜை நோக்கி, `நான் ஆம்பளைன்னு காட்றேன்’ என்கிறார். சகிக்கலைங்க உங்க வில்லத்தன வெளிப்பாட்டு சீன்!
தொடர்புடைய செய்தி: விறுவிறுவென இருக்கிறானா இந்த விருமன்? – விமர்சனம்
இயக்குநர் சசியின் `சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில், தாயொருவர் பேசும் வசனத்தை இங்கே நினைவுகூற விரும்புகிறோம். அவர் தன் மகனிடம் இப்படி சொல்வார் – “ நாங்க உங்க பேண்ட்-ஐ போட்றப்போ, எங்களுக்கு அது வசதியாதான் இருக்கு. சட்டையை போடறப்போகூட, `நாங்களும் ஆம்பள சட்டையப்போட்ருக்கோம்னு சந்தோஷம்தான் பட்றோம். உங்க உள்ளாடையை துவைக்குறப்போகூட, எங்களுக்கு அசிங்கமா இருந்ததில்லையே. ஆனா, உங்களுக்கு பொம்பளைங்க டிரெஸ்னா, அவமானமா இருக்குல்ல? நாங்களும் அவ்ளோ கேவலமான பிறவிங்களாகிட்டோமா? நைட்டிங்கறது, உங்க அம்மா – அண்ணிலாம் போட்ற டிரெஸ் தானேடா?”. இப்படி தமிழ் சினிமா எங்கங்கயோ வளர்ந்துட்டு இருக்கு முத்தையா சார். நீங்க உங்க படங்கள்ல இப்படி முற்போக்கு கருத்துகள் வைக்கலனாலும் பரவாயில்ல, இப்படியான `பெண் ஆடைகள், அவமானத்தின் சின்னம்’ என்பது போன்ற கருத்துகள் வைப்பதை தவிர்ப்பதே சமூகத்துக்கு நீங்கள் செய்யும் பேருதவி. வில்லத்தனத்தை காட்டுவதற்கு எதற்கு பெண் ஆடை மீதான வக்கிர வசனங்கள்?
மனைவியை கணவன் ஏமாற்றியவுடன், அந்த மனைவி தற்கொலை செய்து கொள்வது – தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்காமல், அவரை `திருத்துவதும்’ அவருக்கு `உறவின் உண்ணதத்தை’ எடுத்துரைப்பதுமே எல்லாத்துக்குமான தீர்வு என்பது போன்றவையெல்லாம் எந்தக் காலகட்டத்தில் பேசப்பட்டாலும் தப்புதானே சார்?
இதெல்லாம் படத்தின் மிக முக்கிய நெருடல்கள். இவையன்றி இன்னும் கூட சின்ன சின்னதாய் சில நெருடல்கள் இருக்கின்றன. உதாரணமாக, படம் முழுக்க கார்த்தி `குத்தி கிழிச்சிருவேன்’ என சொல்லிக்கொண்டே இருக்கிறார். வன்முறை வேண்டாமென்று ஹீரோ சொல்கிறாரா, இல்லை சூழ்நிலை அமைந்தால் ‘வன்முறையை கையிலெடுப்பேன்’ என ஹீரோ சொல்கிறாரா என்று புரியவில்லை. ஹீரோயினை கார்த்தி காதலிக்க (!) தொடங்குவதற்கு முந்தைய சீனில், `பொண்ணுனா, பூமாதேவி மாதிரி இருக்கணும். இவ என்ன பூலான்தேவி மாதிரி இருக்காளே’ என்கிறார்.
பூலான்தேவி வரலாற்றை அறிந்துதான் இப்படி வசனம் வைத்தார்களா என்று தெரியவில்லை. இப்படி படத்தில் நெருடல்கள் பல இருக்கின்றன. அடுத்தடுத்த படங்களில், இப்படியான விஷயங்களை தவிர்ப்பது, அல்லது எழுதும்போதே கூடுதல் கவனத்துடன் இருப்பது என ஏதாவது இயக்குநர் செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டாம். சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும், மகிழ்ச்சியே!
– ஜெ.நிவேதா.