ஸ்ரீநகர்: விரைவில் தனிக் கட்சியை ஆரம்பிக்க உள்ள குலாம் நபி ஆசாத், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆண்ட காங்கிரஸ் கட்சி இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. 2014 முதலே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பெரியளவில் வெல்ல முடியவில்லை.
2014க்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ள போதிலும், காங்கிரஸ் அதில் பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளது.
காங்கிரஸ்
இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சி மீதான அழுத்தம் அதிகரித்தது. குறிப்பாக, காங்கிரஸ் தலைமையைப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். தலைமை சரியான முடிவுகளை எடுக்கத் தவறுவதாகவும் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை காட்டுவதில்லை என்றும் உள் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பியது. தலைமையில் மாற்றம் தேவை என்ற கோரிக்கையும் அதிகரித்தது.
மூத்த தலைவர்கள்
இந்தச் சூழலில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் வரிசையாக விலகி வருகின்றனர். மாநில அளவில் வலிமையாக இருந்த தலைவர்களும் சரி, தேசிய அளவில் வலிமையாக இருந்த தலைவர்களும் சரி காங்கிரஸில் இருந்து தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். ஏற்கனவே சிந்தியா, கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்கள் விலகிவிட்டனர். இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத வகையில் மூத்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகினார்
குலாம் நபி ஆசாத்
முதலில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதைத் திட்டவட்டமாக மறுத்தார் குலாம் நபி ஆசாத். காஷ்மீரில் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் தேசிய அளவில் இதை விரிவுபடுத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் விலகிய பின்னர், பல காங்கிரஸ் நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகினர். இன்னும் 10 நாட்களில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடியாது
இந்தச் சூழலில் பாரமுல்லா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370ஐ இனியும் மீட்டெடுக்க முடியாது. 370ஐ மீண்டும் கொண்டு வர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இதை வைத்து மக்களைச் சுரண்டும் கட்சிகளை நான் அனுமதிக்க மாட்டேன். சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பேன் என்று மக்களை ஏமாற்றவும் எனக்கு விருப்பம் இல்லை.
அடுத்த 10 நாட்களில்
இதுவரை நடந்த அரசியல் சுரண்டல் காஷ்மீரில் ஒரு லட்சம் பேரைக் கொன்று, ஐந்து லட்சம் குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளது. நான் பொய் சொல்லி வாக்குகளைக் கேட்க மாட்டேன். வாக்கு கிடைக்காமல் போனாலும் சரி எதை என்னால் செய்ய முடியுமோ அதைப் பற்றி மட்டுமே பேசுவேன். பொய்யான வாக்குறுதிகள் குறித்து நான் பேசமாட்டேன், 10 நாட்களில் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்புகள், நில உரிமைகளை மீட்க மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
காஷ்மீர் பிரச்சினை
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தைத் தரும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதெல்லாம் நடந்து சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.