ஷில்லாங்: ”மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை நான் நிறுத்தினால் துணை ஜனாதிபதி பொறுப்பு வழங்கப்படும் என்றும், ஆனால் நான் அதை ஏற்கவில்லை என்றும்” மேகாலயா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
மேகாலய மாநித்தின் ஆளுநராக இருப்பவர் சத்யபால் மாலிக். ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்த சமயத்தில் தான் அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட சத்யபால் மாலிக், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மேகாலய மாநிலத்தின் ஆளுநராக உள்ளார்.
சத்யபால் மாலிக்
ஜனாதிபதியால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டாலும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே ஆளுநர்கள் கையாள்வது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு வெளிப்படையாகவே சத்யபால் மாலிக் ஆதரவு தெரிவித்து பேசினார்.
மத்திய அரசுக்கு எதிராக பேச்சு
அதேபோல், மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். இப்படி மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கும் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேகாலய கவர்னர் சத்யபால் மாலிக் இது தொடர்பாக கூறியதாவது:-
ராகுல் காந்தி சரியான பணியை செய்கிறார்
மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை நான் நிறுத்தினால் துணை ஜனாதிபதி பொறுப்பு வழங்கப்படும் என்று எனக்கு சூசகமாக கூறப்பட்டது. ஆனால் நான் அதை செய்யவில்லை. நான் என்ன நினைக்கிறேனோ அதையே பேசுகிறேன்” என்றார். அதேவேளையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய சத்யபால் மாலிக், ”இதை (பாரத் ஜோடா யாத்திரை) எனக்கு தெரியாது. மக்கள்தான் இதைபற்றி கூறினார்கள். ஆனால், ராகுல் காந்தி சரியான பணியை செய்கிறார் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக மேற்கு வங்காள ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் நிறுத்தப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார். இந்த தேர்தலில் 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.