குளித்தலை: குளித்தலை, முசிறி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், மருதூர் முதல் உமையாள்புரம் வரை காவிரியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவரும், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி முன்னாள் முதல்வருமான வளையப்பட்டி ஜெயராமன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டம் மண்மங்களம் வட்டாரம், நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரம், நாமக்கல் -அனிச்சம்பாளையம் வட்டாரம் ஆகியவைகள் மிகுந்த நீர்வளம் உள்ள பகுதிகளாகும். காவிரி-அமராவதி ஆறுகள் சங்கமிக்கும் நீர்வளம் மிகுந்த கரூர் மாவட்டம் மண்மங்களம் வட்டாரத்தில் கடந்த 2020 ஆண்டு ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கரூர் நஞ்சைப் புகளூர் மற்றும் நாமக்கல் -அனிச்சம்பாளையம் ஆகிய இருகரைகளில் காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதைத்தவிர தற்போது கரூர் மாவட்டம் மண்மங்களம் வட்டாரத்தில் நெரூர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்ற இடத்தை இணைக்கும் வகையில் புதிதாக ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் மேலும் ஒரு கதவணை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஆக கரூர் மாவட்டம் மண்மங்களம் வட்டாரத்தில் மட்டும் 3 கதவணை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் இரண்டு கதவணை கட்டும் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மாயனூர்மதுக்கரை என்ற இடத்திலும் காவிரியின் குறுக்கே கதவணைகள் உள்ளன.
கரூர் மாவட்டம் மண்மங்களம் பகுதிகளில் விவசாயத்திற்கு பாசனநீர் ஆண்டு முழுவதும் கிடைகிறது. இவற்றை ஒப்பிடுகையில் குளித்தலை மற்றும் முசிறி வட்டாரங்கள் வறட்சியான பகுதிகளை அதிகம் கொண்டுள்ளது. மேலும் குளித்தலை மற்றும் முசிறி வட்டாரங்களில் விவசாயத்திற்கு பாசனநீர் 6 மாதங்கள் மட்டுமே கிடைகிறது. இதைத்தவிர நிலத்தடி நீர்மட்டம் இடத்திற்கு ஏற்றார் போல் 500 அடி முதல் 1000 அடி வரை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது.
ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்க நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட தக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். குளித்தலை, முசிறி மற்றும் ரங்கம் வட்டார மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு காவிரியில் வெள்ள காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே காவிரி தென்கரையில் மருதூர் முதல் வடகரையில் உமையாள்புரம் வரையில் கதவணையை அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.750 கோடி மதிப்பீட்டில் 2021-2022 நிதியாண்டில் அனுமதித்தது கைவிடப்பட்டதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களையும் விவசாயிகளையும் பெரும் வருத்தமடைய செய்துள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதி முதன் முதலாக வெற்றி பெற்ற கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் காவிரியின் தென்கரையில் மருதூர் முதல் வடகரையில் உமையாள்புரம் வரையில் தடுப்பணையை குளித்தலை மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதி மக்கள் பயனடையும் வகையில் கதவணையை ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்தபடி ரூ.700 கோடி மதிப்பீட்டில் வரும் 2022-2023 நிதியாண்டில் அமைத்து தர வேண்டும்.,
இந்த திட்டத்தால் குளித்தலை, முசிறி மற்றும் ரங்கம் வட்டாரத்தில் 44,000 ஏக்கர் நிலம் பாசன வசதிகள் பெறும். 20 கீ.மீ. தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் செரிவூட்டபடும். குளித்தலை முசிறி மற்றும் ரங்கம் வட்டாரத்தில் போக்குவரத்து வசதிகள் உட்பட புதிய வளர்ச்சி பணிகளுக்கு கட்டமைப்புகள் ஏற்படும். மருதூர் முதல் உமையாள்புரம் வரையில் அமையவுள்ள கதவணையில் இருந்து தான் தென்மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கதவணையை அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.750 கோடி மதிப்பீட்டில் 2021-2022 நிதியாண்டில் அனுமதித்தது கைவிடப்பட்டதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களையும் விவசாயிகளையும் பெரும் வருத்தமடைய செய்துள்ளது.