நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியை புத்துயிர் பெற செய்யும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டுள்ள இந்த பயணம், கன்னியாகுமரி முதல் ஜம்மு -காஷ்மீர் வரை, 150 நாட்கள், 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைப்பயணத்தில் மொத்தம் 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் என நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களுக்கு செல்ல உள்ளார் ராகுல்.
‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ எனும் இந்த நடைப்பயணத்தை கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 11) கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல், முதல் மூன்று நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் யாத்திரை மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
நேற்று (செப்.10) அவர் மார்த்தாண்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வயல்வெளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த கிராமத்து பெண்களுடன் கலந்துரையாடினார். ராகுலை நேரில் கண்ட மகிழ்ச்சியில் அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், அவருடன் பல விஷயங்கள் குறித்து வேடிக்கையாக கலந்துரையாடினர்.
அப்போது சில பெண்மணிகள், ‘நீங்கள் தமிழ்நாட்டை மிகவும் நேசிப்பதாக கூறுவதால், உங்கள் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தத பெண்ணையே திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறோம்… என்ன சொல்றீங்க… ஓகேவா?’ என குறும்புத்தனமாக கேட்டு ராகுலை வெட்கப்பட செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான இந்த நிகழ்வை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தமது திருமணம் குறித்து தமிழ்நாட்டு பெண்கள் கேட்டதும், ராகுல் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதை அவரது புகைப்படங்கள் உணர்த்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் என்றதும் அவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்மணிகளின் மனதில் எழும் முதல் கேள்வியாக உள்ளது. பல லட்சக்கணக்கான பெண்களின் மனதில் நீண்ட நாட்களாக உள்ள கேள்விக்கு விடையாக மார்த்தாண்டத்தைச் சேர்த்த பெண்கள், தமிழ்நாட்டு பெண்ணை கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா? என வெகு இயல்பாக கேட்டு, ராகுலை அசத்தியுள்ளனர்.
ராகுல் காந்திக்கு தற்போது 52 வயது நிறைவடைந்துள்ள நிலையிலும் அவரது திருமணம் குறித்த பேச்சு பெண்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு மார்த்தாண்டத்தில் நடந்துள்ள சுவாரஸ்யமான இந்த சம்பவம் ஓர் உதாரணம்.