செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள இரும்புலியூரைச் சேர்ந்தவர், சரித்திரப் பதிவேடு குற்றவாளி விவேக் ராஜ். 28 வயதான இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, ஆள் கடத்தல், கஞ்சா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர் மற்றும் ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள்தான் விவேக் ராஜின் டார்கெட். தன்னிடம் சிக்கும் மாணவர்களிடம் கஞ்சா,போதை ஊசி போன்றவற்றைக் கொடுத்து கல்லூரி வளாகத்தில் விற்கச் சொல்லி அதில் கல்லா கட்டி வந்தார். இது தொடர்பாகப் பல முறை கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியும், விவேக் ராஜின் அட்டகாசம் அடங்கியபாடில்லை. ஸ்கெட்ச் போட்டுத் தேடப்படும் குற்றவாளியாக மாறியவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பயங்கர குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, முன் விரோதம் காரணமாக விவேக் ராஜுக்கும் தாம்பரத்தைச் சேர்ந்த லெனின், முகேஷ் ஆகிய ரவுடிகளுக்கும் இடையே தீராப் பகை ஏற்பட்டுள்ளது. பல முறை மோதிக்கொண்டவர்கள் தாம்பரத்தின் அமைதிக்கு இடையூறாக இருந்துள்ளனர். இந்நிலையில், லெனின், முகேஷ் ஆகிய இருவரையும் பழிக்குப் பழி தீர்க்க நினைத்த விவேக் ராஜ், தனது கூட்டாளியான விஷாலுடன் இணைந்து திட்டம் தீட்டியிருக்கிறார். பட்டப்பகலில் வைத்து அந்தக் கொடூரத்தை அரங்கேற்ற நினைத்தவர்களின் திட்டம், எப்படியோ போலீஸாருக்குத் தெரியவந்தது.
ஆள் கடத்தல், அடிதடி, கஞ்சா என்ற போக்கில் வழக்கு மேல் வழக்குகளில் சிக்கியவர்ள், கொலை செய்யப் போட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் களத்தில் போலீஸார் இறங்கி வேட்டையாடத் தயாரானார்கள். தனிப்படை அமைக்கப்பட்டு தாம்பரம் முழுக்க அலர்ட் செய்யப்பட்டது. போலீஸாரின் தேடுதல் வேட்டையில் தாம்பரம் அடுத்த முடிச்சூர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், விவேக் ராஜும், விஷாலும் மது அருந்திக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
உடனே தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையில், தனிப்படை போலீஸார் விரைந்து சென்றனர். டாஸ்மாக் கடையில் இருந்த விவேக் ராஜ் மற்றும் விஷாலைச் சுற்றி வளைத்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் விவேக் ராஜும், விஷாலும் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து போலீஸாரை வெட்ட முயன்றனர். அதில், சுதாரித்துக் கொண்ட தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், தனது பாதுகாப்புக்காகக் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் குற்றவாளிகளைப் பார்த்து மிரட்டல் விடுத்தார். துப்பாக்கியைப் பார்த்ததும் அலறி அடித்துக்கொண்டு தப்பிக்க முயன்றவர்கள், பைபாஸ் சாலை அருகே உள்ள தண்ணீர் குழாய் பைப் மீது ஏறி ஓடினர். போலீஸாரும் விடாது அவர்களை விரட்ட அப்போது அங்குள்ள பள்ளத்தில் விவேக் ராஜ் தவறி விழுந்தார்.
நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்க, போலீஸாரிடம் விவேக் ராஜ் வசமாகப் பிடிபட்டார். மேலும், தப்பியோடிய கூட்டாளி விஷாலையும் மடக்கிப் பிடித்தனர். பள்ளத்தில் விழுந்ததில் விவேக் ராஜுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அதனை அடுத்துப் பெரும் போலீஸ் படை வரவழைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்போடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்தபின், விவேக் ராஜ், விஷால் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விவேக், விஷால் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர். அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபடத் திட்டமிட்ட இருவரும் போலீஸில் பிடிபட்ட சம்பவம் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரவுடிகளை கதிகலங்க வைத்துள்ளது.