திருப்பதி லட்டு… சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்வீட் நியூஸ்!

திருப்பதி என்றாலே உடனே அனைவரின் நினைவுக்கும் வருவது அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்புடும் லட்டுதான். திருப்பதிக்கு ஆன்மிக யாத்திரை சென்று வருபவர்களிடம் சாமி தரிசனம் எப்படி இருந்தது என்று கேட்பவர்களைவி, எங்கே லட்டு என்று கேட்பவர்கள்தான். அந்த அளவுக்கு திருப்பதி லட்டு உலக அளவில் ஃபேமஸ்.

பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு தலா ஒன்று எனும் வீதம் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் கூடுதல் லட்டு தேவைப்படுவோர் டோக்கன் ஒன்றுக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை பணம் கொடுத்து வாங்கி கொள்ளும் வசதியும் திருமலையில் உள்ளது.

ஆனால், இனி்ப்பு சுவை அதிகமுள்ள திருப்பதி லட்டை சர்க்கரை நோயாளிகள் சுவைக்க முடியாத குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த குறையை தீர்க்கும் நோக்கில், சர்க்கரை நோயாளிக்கென்று பிரத்யேகமான லட்டை தயாரித்து வழங்க ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் பக்தர்களிடம் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தொலைபேசி வழியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த பக்தர்கள் ஒருவர், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் இனிப்பு சுவை சற்று தூக்கலாக உள்ளது.

இதன் காரணமாக அதனை தம்மை போன்ற சர்க்கரை நோயாளிகள் சுவைக்க முடிவதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். அவரது வருத்தத்தை புரிந்துகொண்ட தேவஸ்தான அதிகாரி, சர்க்கரை நோயாளிக்கென பிரத்யேகமாக லட்டு தயாரித்து விநியோகிப்பது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

TTD: திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்… அப்படி என்ன சிறப்பு?

இதேபோன்று, வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்கள் கர்ப்பகிரகத்தை நெருங்கும்போது, அவர்களை சில வினாடிகள் கூட சாமி தரிசனம் செய்யவிடாமல், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஜர்கண்டி… ஜர்கண்டி… என்றபடி தள்ளிவிடுவது குறித்தும் பல பக்தர்கள் தர்மா ரெட்டியிடம் புகார் தெரிவித்தனர்.

பக்தர்களை இப்படி தள்ளிவிடக் கூடாது என பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி நடக்கும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மா ரெட்டி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.