துவாரகா பீட சங்கராச்சாரியார் மறைந்தார்: பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா இரங்கல்

மத்தியப் பிரதேசம்: துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி இன்று காலமானார்.

அத்வைத ஆச்சாரியரான ஆதி சங்கரர் தோற்றுவித்த துவாரகா பீடத்தின் அதிபராக இருந்து வந்த ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி இன்று காலமானார். அவருக்கு வயது 99. மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூரில் உள்ள ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் இன்று மாலை 3.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

மத்தியப் பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924ம் ஆண்டு பிறந்த இவர், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருந்த பிரம்மானந்த சரஸ்வதியின் சீடராக இருந்தார்.

குஜராத்தில் உள்ள துவாரகா பீடம் மற்றும் உத்தரகாண்ட்டில் உள்ள ஜோதிர் மடம் ஆகிய இரண்டுக்கும் தலைவராக இருந்து வந்த ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அகில பாரதிய ராம ராஜ்ஜிய பரிஷத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவரான ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, 1942ல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் தனது இரங்கல் செய்தியில், ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், அவரை பின்பற்றுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சனாதன தர்மத்தை பரப்புவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.