மும்பையில் பிரபல பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 மாதங்களாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்த பியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கிராண்ட் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் பியூன் வேலைசெய்துவந்த 35 வயது நபர் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பில் பயிலும் 15 வயது மாணவியிடம் நட்பை வளர்த்துள்ளார். பின்னர் அதே நட்பை பயன்படுத்தி கடந்த ஜூலை மாதத்திலிருந்து அந்த மாணவியை பலமுறை கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறார். மேலும் அதுபற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியிருக்கிறார்.
ஆனால் பியூனின் தொல்லை தாங்கமுடியாத சிறுமி ஒருகட்டத்தில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு பியூன் தன்னிடம் தவறாக நடந்துகொள்வதை தனது தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார். உடனே சிறுமியின் தாயார் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு இதுபற்றி கூறியதுடன், போலீசாரிடமும் சென்றுவிட்டார். காம்தேவி காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரில் அடிப்படையில் பியூன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பியூன் மீது இந்திய சட்டப்பிரிவுகள் 354, 354ஏ மற்றும் 354டி மற்றும் போக்சோ பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு வீடியோ கால் செய்து ஆடைகளை கழற்றச்சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (ஐடி) சட்டப் பிரிவு 67 ஏ-இன் கீழ், வெளிப்படையான பாலியல் செயலை மின்னணு வடிவில் வெளியிடுவது அல்லது அனுப்புவது போன்றவற்றுக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் பள்ளியில் வேறு மாணவிகளிடமும் இதுபோல் நடந்துகொண்டாரா என்றும் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM