ஹைதராபாத்: விரைவில் தேசிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் அலுவலகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சந்திரசேகர் ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய செயல்திட்டங்களுடன் கூடிய தேசிய கட்சியை தொடங்குவது தொடர்பாக மிக நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அதில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறை சார் நிபுணர்கள் எனப் பலரிடமும் மிக நீண்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு எவ்வாறு தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதோ அதேபோல் தற்போதும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் தேசிய கட்சி தொடங்கப்பட்டு அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சிக்கு பாரத ராஷ்ட்ர சமிதி என்ற பெயர் வைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத், கர்நாடகா ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் தனது புதிய கட்சியை போட்டியிடவைக்க சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்ப தற்போதே இந்த மாநிலங்களில் நிர்வாகிகளை கண்டறிய கட்சியின் மூத்த தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி, சந்திரசேகர் ராவை இன்று சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.