கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடியவர் கொலை?

கல்குவாரி விவகாரத்தில் ஜெகநாதன் என்பவர் உயிரிழந்த நிலையில், இது முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா எனப் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகே செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலப்பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் மீது கடந்த 2019ஆம் ஆண்டு செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் செல்வகுமாரின் கல்குவாரி, உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் பல்வேறு புகார்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் மூடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நேற்று இரவு க.பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்குச் சொந்தமான பொலிரோ வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

ஜெகநாதன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை லாரி ஏற்றிக் கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அன்னை ப்ளூ மெட்டல்ஸ் கல்குவாரியின் உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் டிரைவர் சக்திவேல்மீது கொலை வழக்கு பதிவுசெய்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அனுமதியில்லாமல் இயங்கிவந்த கல்குவாரிக்கு எதிராக போராடிவந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.