பொதுவாக போக்குவரத்து சாலையை ரயில் கடக்கும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் காத்திருந்து செல்வது வழக்கம். ஆனால், திருச்சி மேலப்புதூரில் ரயில் மேம்பாலத்தில் செல்லும்போதும் கீழே இருசக்கர வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
திருச்சி மேலப்புதூரில் மேலே ரயிலும், கீழே வாகனங்களும் செல்வது போன்ற சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்க பாதையானது மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
திருச்சியிலிருந்து கரூர், ஈரோடு, கோவை, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்கள், இந்தச் சுரங்கபாதை மேம்பாலம் வழியே சென்று வருகின்றன.
மேலே ரயில் பாலத்தை கடக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில் கடக்கும்வரை காத்திருந்து பிறகு செல்வது வாடிக்கையாக இருக்கிறது. காரணம் ரயில் கடக்கும்போது சிறுநீர் கழிவுகளும், இதர நீர் கழிவுகளும் சாலையில் தெளிப்பதனால், அந்த சாலையில் ஏற்கெனவே சென்று தெளிவுபெற்ற வாகன ஓட்டிகள் சற்று முன்பாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு ரயில் செல்லும் வரை காத்திருக்கின்றனர். இதனால் சில நேரங்களில் போக்குவரத்து சிரமமும் ஏற்படுகிறது. புதிதாக மேலப்புதூர் பாலத்தை கடந்து செல்லும் நபர்கள், நிற்பவர்களை கேள்விக்குறியாக பார்த்துவிட்டுச் சென்று, பின்னர் தெளிவு பெறுவர். “பாலத்தின் அடியில் தகர தட்டுகள் போடப்பட்டிருந்தாலும் அவை ஆங்காங்கே துருப்பிடித்து சற்றே சேதமாக இருக்கின்றன. இதுவே இந்த அவலத்துக்குக் காரணம்…. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது” என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
இது குறித்து தெற்கு ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் ( Assistant Divisional Engineer ) மாணிக்கவாசகத்திடம் கேட்டோம்.
“எங்களுக்கு அந்தப் பாலத்தில் அப்படி ஒரு இடையூறு இருப்பது பற்றி தற்போதுதான் தெரிகிறது. பயோ – டாய்லெட்கள் அமைத்துள்ளோம். ஆனால் தகரத்தின் சேதத்தால் இப்படி இருக்கலாம். இதை பற்றி யாரும் எதுவும் புகார் தெரிவிக்காததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அந்தப் பாலத்தை சீரமைத்து சரி செய்து விடுவோம்” என்று கூறினார்.
அவர் கூறியது போல் விரைவாக சீரமைத்தால் போக்குவரத்து நெரிசலி்ன்றி இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமின்றி செல்ல முடியும்.