சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று சென்னை, வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் பரபரப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் கே. பாக்கியராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான கே. பாக்கியராஜ் வெற்றி பெற்று மீண்டும் எழுத்தாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
எழுத்தாளர் சங்கத் தேர்தல்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. சென்னை, வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடந்த தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டி
தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவராக நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் இருந்து வரும் சூழலில் மீண்டும் அவர் அந்த பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து இயக்குநரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில், கே. பாக்கியராஜ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கியராஜ் வெற்றி
காலை முதலே ஆர்வமாக அதன் உறுப்பினர்கள் வாக்களித்து வந்த நிலையில், தேர்தல் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன. அதிகபட்சமாக பாக்கியராஜ் 192 வாக்குகள் பெற்று இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் மீண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தலைவராக அவரே பொறுப்பேற்க உள்ளார்.
எஸ் ஏ சந்திரசேகர் தோல்வி
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்கியராஜை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் வெறும் 152 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி பெற்ற பாக்கியராஜுக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைப்பேன். அவங்க அப்பா கருணாநிதி எல்லாம் எழுத்தாளராக இருந்தவர் தானே, உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் தானே உள்ளார். நிச்சயம், உதவுவார்கள் என நம்புகிறேன் என்றார்.