கடையம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோயில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. யானை வடிவில் உள்ள மலைமீது முருகன் பெருமான் கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும். மேலும் இந்த மலையில் சுமார் 64 சுனைகளும் இருக்கின்றன. முருகன் கோயில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது வழக்கம்.
நேற்று ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையைச் சுற்றியும், முருகனின் பக்தி பாடல்களை படித்தவாறும், முருகனின் சரண கோசங்களை எழுப்பியவாறும் பக்தி பரவசத்தோடு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து தோரணமலையை கிரிவலம் வந்தனர். கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.