சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேங்கிய மழை நீரை வெளியேற்றவும் தேவையான கருவிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஏற்கெனவே உள்ள 2 ஆயிரத்து 71 கி.மீ.நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் புதிதாகவும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்த மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
400 மோட்டார் பம்புகள்: அதில் அரசு செயலர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வரும் புதிய மழை நீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் அந்த மழை நீர் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும்.
ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வண்டல்கள் அகற்றப்பட்டு அவைஉடனடியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொட்ட வேண்டும்.
கடந்த காலங்களில் மழைநீர் தேங்கும் 400 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீரை வெளியேற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகள், குறைந்த திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகள் என மொத்தம் 400 மோட்டார் பம்புகள் உள்ளன.
இந்தஇடங்களில் மழைநீர் வெளியேற்றும் மின் மோட்டார் பம்புகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.
மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகளை உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றை இயக்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து வகையான உபகரணங்களையும் முன் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகள், அதில் இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்ல இணைக்கப்பட்டுள்ள குழாய்க ளில் அடைப்புகள் ஏதுமின்றி மழை நீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து மழைநீர் வடிகால்களும் நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் தங்கு தடை இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், தொடர்புடைய அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய கையேட்டை தயார் செய்ய வேண்டும். இவ்வாறுஅவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன், டி.சினேகா, எம்.சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.